crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (14) நடைபெற்றதுடன் அக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

01. ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி மற்றும் ரஷ்ய குடியரசின் UFA அரச விமான சேவைகள் தொழிநுட்ப கல்லூரிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் நற்தொடர்புகளை தொடர்ந்தும் வலுப்படுத்தல், விமான மற்றும் விண்வெளிப் பொறியியல் துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்களை அதிகரித்தல், கூட்டாக ஆர்வம் காட்டும் துறைகள் தொடர்பாக ஆய்வுகளை நடாத்துவதற்காக கல்வியியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளைப் பரிமாற்றிக் கொள்ளல் போன்ற நோக்கங்களுடன், ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி மற்றும் ரஷ்ய குடியரசின் UFA அரச விமான சேவைகள் தொழிநுட்ப கல்லூரிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக பாதுகாப்பு அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பரா ஒலிம்பிக் போட்டித்தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற ஹேரத் முதியன்சலாகே தினேஷ் பிரியந்த ஹேரத் அவர்களுக்கு வீடொன்று வழங்குதல்

ஜப்பான் டோக்கியோ நகரில் 2020 ஆம் இடம்பெற்ற பரா ஒலிம்பிக் போட்டித்தொடரில் ஹேரத் முதியன்சலாகே பிரியந்த தினேஷ் ஹேரத் அவர்கள் ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை படைத்து தங்கப்பதக்கத்தை வென்றெடுத்து இலங்கைக்குப் புகழ் ஈட்டிக் கொடுத்துள்ளார். நாட்டிற்கு புகழ் ஈட்டிக் கொடுத்தமையைப் பாராட்டுமுகமாக நகர அபிவிருத்தி அதிகார சபையால் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொம்பனித்தெரு மெட்ரோஹோம் வீடமைப்புக் கருத்திட்டத்தில் 14.2 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான வீட்டு அலகொன்றை வழங்கல் கொடுப்பனவாக ஒப்படைப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. இலங்கை விமானப்படைக்கு மருத்துவமனையொன்றை அமைப்பதற்காக நாரஹேன்பிட்டிப் பகுதியில் காணியொன்றை வழங்கல்

நகர அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்காக நாரஹேன்பிட்டிப் பகுதியில் 07 ஏக்கர் மற்றும் 39.9 பேர்ச்சர்ஸ் கொண்ட காணி நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப் படை மருத்துவமனையொன்றை அமைப்பதற்காக 03 ஏக்கர் காணியைப் பெற்றுத்தருமாறு நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரியுள்ளது. அதற்கமைய, குறித்த 03 ஏக்கர் காணித்துண்டை வழங்கல் கொடுப்பனவாக, இலங்கை விமானப்படைக்கு ஒதுக்கி வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. வட மத்திய மாகாண மஹஎல கருத்திட்டத்தின் கீழ் களுகங்கை – மொரகஹகந்தயை இணைக்கும் சுரங்க அகழ்வின் போது அகற்றப்படுகின்ற கழிவுகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கல்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியனுசரணையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் மகாவலி நீர்ப் பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் வடமத்திய மாகாண மஹஎல கருத்திட்டத்தின் கீழ் களுகங்கை – மொரகஹகந்தயை இணைக்கும் சுரங்க அகழ்வின் போது அகற்றப்படுகின்ற அகழ்வு மண்கழிவுகள் ( Tunnel Muck ) தற்காலிகமாக வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தில் சேகரிக்கப்படுகின்றது.

குறித்த மண்கழிவுகள் நிர்மாணப் பணிகளுக்கு நேரடியாhகப் பயன்படுத்த முடியாத கருங்கற்களை அதிகமாகக் கொண்டுள்ளது. சுரங்க நிர்மாணிப்பால் புனரமைப்பு மற்றும் மேம்படுத்த வேண்டியுள்ள இலுக்கும்புர தொடக்கம் லக்கல வரையான 9.3 கிலோமீற்றர் வீதிப் புனரமைப்பு மற்றும் மேம்படுத்தல் நடவடிக்கைகளுக்காகவும் மற்றும் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 100,000 கிலோமீற்றர் வீதிப் புனரமைப்புக்குத் தேவையான ABC மூலப்பொருள் ( Aggregate Base Course ) தயாரிப்புக்குப் பயன்படுத்தக் கூடிய வகையில் குறித்த கழிவு மூலப்பொருட்களை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு இலவசமாக வழங்குவதற்காக நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. விவசாய, வனாந்தரம் மற்றும் ஏனைய காணிப்பயன்பாட்டுத் துறைகளுக்கான வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் சட்டகத்தைத் தயாரிக்கும் கருத்திட்டம்

இலங்கையில் 1993 ஆம் ஆண்டு தொடக்கம் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான சட்டகப்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் பங்காளி அரசாக செயற்பட்டு வருவதுடன், 2016 ஆம் ஆண்டு பரிஸ் ஒப்பந்தத்தையும் ஏற்று அங்கீகரித்துள்ளது. பரிஸ் ஒப்பந்தத்தின் தேசிய ரீதியான கேந்திர நிலையமாக சுற்றாடல் அமைச்சு செயற்பட்டு வருகின்றது. குறித்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கமைய இலங்கையில் தேசிய ரீதியாக நிச்சயிக்கப்படும் பங்களிப்புக்கள் 2021 ஆம் ஆண்டு யூலை மாதம் 30 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பாக சட்டகப்படுத்தப்பட்ட மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன்,

அதன் கீழ் முக்கிய 02 துறைகளாக விவசாயமும் வனாந்தரமும் அடையாளங் காணப்பட்டுள்ளது. பரிஸ் ஒப்பந்தத்தின் 13 ஆம் உறுப்புரைக்கமைய, பங்காள அரசுகளால் காலநிலை மாற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் முன்னேற்றங்களை வெளிப்படைத்தன்மையுடன் அறிக்கைப்படல் வேண்டும். அதற்கமைய, விவசாய, வனாந்தரம் மற்றும் ஏனைய காணிப்பயன்பாட்டுத் துறைகளுக்கான வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் சட்டகத்தைத் தயாரிப்பதற்காக உலகளாவிய சுற்றாடல் வசதிகள் நிதியனுசரணையின் கீழ் சுற்றாடல் அமைச்சின் ஆலோசனையுடனும்,

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிதியத்தின் ஒத்துழைப்புடன் கருத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலகளாவிய சுற்றாடல் நிதியனுசரணையின் கீழ் 863,242 அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதற்காக குறித்த உதவி வழங்கலைப் பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. விமானநிலைய ஹோட்டல்கள் இரண்டினை நிர்மாணிப்பதற்காக மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு அண்மித்து அமைந்துள்ள காணிகள் இரண்டை குத்தகை அடிப்படையில் வழங்கல்

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள அம்பாந்தோட்டைப் பிரதேசம்; பிரதான சுற்றுலாப் பயணப் பிரதேசமாக இருப்பினும், தற்போது அப்பிரதேசத்தில் ஒரு சில ஹோட்டல்கள் மாத்திரமே காணப்படுகின்றது. விமான நிலையத்திற்கு அண்மையில் 04 நட்சத்திர அந்தஸ்துள்ள ஹோட்டல்கள் 02 அமைத்து, சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதன் மூலம் அதிக நன்மைகளைப் பெறலாம் எனக் கண்டறிபப்பட்டுள்ளது. அதற்காக விமான நிலைய முனையக் கட்டிடத்தின் வலதுபுறத்தில் அமைந்துள்ள 15 ஹெக்ரயார் காணியில் 02 காணித்துண்டுகள் அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள 02 ஹோட்டல்களை அமைப்பதற்காக முதலீட்டாளர்களிடமிருந்து கருத்திட்ட முன்மொழிவகளைப் பெற்றுக் கொள்வதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. காணாமல் போன ஆட்களின் குடும்பங்களைப் மீள்வாழ்வளிப்பதற்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் கொடுப்பனவை வழங்கல்

இழப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கமைய, பல்வேறு நிலைமைகளின் கீழ் ஏற்பட்ட தொந்தரவுகளால் அழுத்தங்களுக்குள்ளாகிய பிரஜைகளுக்கு அவர்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்காகவும் மற்றும் மீள்நிலைக்குக் கொண்டுவருவதற்கு ஒத்துழைப்பதற்காகவும் இக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்கால சந்ததியினர் உள்ளிட்ட இலங்கையர்களின் நலன்களுக்காகவும் பாதுகாப்புக்காகவும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் தற்போது வகுக்கப்பட்டுள்ள கொள்கைகளுக்கமைய அக்குடும்பங்களுக்கு உதவிகளை வழங்க வேண்டியுள்ளது.

2016 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டத்தின் மூலம் காணாமல் போன நபர்கள் தொடர்பாக சரியான விசாரணைகளை நடாத்திய பின்னர் இறப்புச் சான்றிதழ் அல்லது காணக்கிடைக்கவில்லை என்ற சான்றிதழை வழங்குவதற்காக பதிவாளர் நாயகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் கண்டறிப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பதிவாளர் நாயகத்தால் வழங்கப்பட்டு காணக்கிடைக்கவில்லை எனும் சான்றிதழைப் பெற்றுள்ள காணாமல் போன நபரின் நெருங்கிய உறவினருக்கு குடும்ப மீள்வாழ்வுக்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் 100,000 ரூபாய்களைச் செலுத்துவதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. வத்தளை, மில்லகஹவத்த பிரதேசத்தில் 408 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் கருத்திட்டம்

வத்தளை, மில்லகஹவத்த பிரதேசத்தில் 408 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய ரீதியான போட்டி விலைமுறிப் பொறிமுறையைப் பின்பற்றி விலைமனு கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஒப்பந்தத்தை இன்ரநெஷனல் கன்ஸ்ரக்சன் கொன்சோட்டியம் (தனியார்) கம்பனிக்கு வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் கீழ் நடுக்குடா, சுன்னாகம் மற்றும் ஆனியாகந்த உப மின் நிலையங்களை மேம்படுத்தல்

இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொருத்தமான ஒப்பந்தக்காரர்களைத் தெரிவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறைப் பொறிமுறையைப் பின்பற்றி விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஒப்பந்தத்தை TBEA ஷென்யென் ட்ரான்ஷ்போமர் குறூப் மற்றும் சீலெக்ஸ் இன்ஜினியரிங்க் லிமிட்டட் கூட்டு வர்த்தகத்திற்கு வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறித்த பரிந்துரைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. டீசல் இறக்குமதிக்கான நீண்ட கால ஒப்பந்தத்தை வழங்கல்

2022.03.01 தொடக்கம் 2022.10.31 வரையான (08) மாதகாலத்திற்கான டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் 0.05) இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடம் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளது.

குறித்த பெறுகையை கொரல் எனேர்ஜி DMCC நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிரந்தரப் பெறுகைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பெறுகையை வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. பயிஃபேசிக் அயிசோஃபேன் இன்சுலின் ஊசிமருந்து பிபீ 30ஃ70, 1000 ஐயூஃ10 மில்லிலீற்றர் வயல்ஸ் 1,900,000 விநியோகத்திற்கான பெறுகை

நீரிழிவு நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் இவ் ஊசிமருந்தை கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவால் விபரங்களுடன் கூடியதாகப் பதிலளித்துள்ள குறைந்த விலைமனுவான இந்தியாவின் Wockhardt Limited நிறுவனத்தின் விலைமனுக் கோரலுக்கு வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த ஊசிமருந்துத் தொகையின் 1.5 மில்லியன்களை மாத்திரம் ஆரம்பத்தில் விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் Wockhardt Limited நிறுவனத்திற்கு வழங்குவதற்கும், எஞ்சிய ஊசிமருந்துகள் 2022 ஆம் ஆண்டின் உண்மைப் பயன்பாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் கொள்வனவு செய்வதற்கும் சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. நுண்துகள்கள் வடிகட்டி முகக்கவசங்கள் 3,000,000 இனை விநியோகிப்பதற்கான பெறுகை

சுவாசத்தொகுதியில் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தும் இம்முகக் கவசங்களை கொள்வனவு செய்வதற்கு சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளது. தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவால் குறித்த பெறுகைக் கோரலுக்குரிய விபரங்களுடன் பதிலளித்துள்ள குறைந்த விலைமனுவான லக்கி இன்டஸ்ரீஸ் தனியார் கம்பனிக்கு வழங்குவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பெறுகையை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. ஹியூமன் அல்பியூமின் திரவ பிபீஃபிஎச் ஈயூஆர், 20மூ, 50 மில்லிலீற்றர் 360,000 போத்தல்களை விநியோகிப்பதற்கான பெறுகைக் கோரல்

பல்வேறுபட்ட நோய் நிலைமைகளால் பீடிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இம்மருந்து பயன்படுத்தப்படுவதுடன், குறித்த மருந்தைக் கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளது. தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு, விபரங்களுடன் பதிலளித்துள்ள குறைந்த விலைமனுவான சுவிட்சர்லாந்தின் M/s Baxalta GmbH நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழு பரிந்துரைத்துள்ளது. அதற்கமைய, குறித்த பெறுகையை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. 2022 ஆம் ஆண்டு சிறுபோகச் செய்கைக்காக சுற்றாடல் நேயம்மிக்கதும், உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்டதுமான உரங்களின் பெறுகைக் கோரல்

2022 ஆம் ஆண்டு சிறுபோகச் செய்கைக்காக மதிப்பிடப்பட்டுள்ள பயிர்ச்செய்கைக் காணிகள் 600,000 ஹெக்ரயார்களாகும். அதற்காக உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட சுற்றாடல் நேயம்மிக்க உரப் பெறுகைக்காக 2022 ஜனவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, உள்ளூர் போட்டி விலைமனுப் பொறிமுறையைப் பின்பற்றி விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன்,

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய பெறுகைகளை வழங்குவதற்காக 46 விலைமனுதாரர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கைக்காக உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சுற்றாடல் நேயமிக்க உரங்களை விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை குறித்த விலைமனுதாரர்களுக்கு வழங்குவதற்காக விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. விமானக் கம்பனி, இணையவழி சுற்றுலாப் பிரதிநிதிகள் மற்றும் பிரதான சர்வதேச சுற்றுலா வழிகாட்டிகளுடன் கூட்டிணைந்த ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

அதிகமான சுற்றுலாப் பயணிகளை எமது நாட்டுக்கு வரவழைப்பதற்காக வர்த்தக மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ( B2C ) இடையிலான சந்திப்புத் தொடர்பாகக் கவனம் செலுத்தப்படும் கூட்டிணைந்த ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் திட்டமிட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தால் விமானக் கம்பனி, தெரிவுசெய்யப்பட்ட இணையவழி சுற்றுலாப் பிரதிநிதிகள் மற்றும் பிரதான சர்வதேச சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற விளம்பர நிறுவனங்கள், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு முன்மொழிவுகளைப் பெறுவதற்காக சுற்றுலாத்துறை அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. குடியியல் வழக்குக் கோவை திருத்தம் (101 ஆம் அத்தியாயம்)

நீதி வழங்கும் செயன்முறையை வலுப்படுத்துவதற்காகவும், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகளின் நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காகவும் தேவையான சந்தரப்பங்களில் வழக்கு விசாரணைகளின் போது செவிப்புல – கட்புலத் தொடர்பாடல் உதவியுடன் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, திறந்த நீதிமன்றங்களில் சாட்சியாளர் ஒருவரால் வழங்கப்படும் வாய்மொழிமூல சாட்சிகள் தொடர்பான ஏற்பாடுகளை உள்வாங்குவதற்காக குடியியல் சட்டக்கோவையின் 167(அ) தொடக்கம் 167(ஓ) வரை புதிய உறுப்புரைகளை உட்சேர்த்து திருத்தம் செய்வது பொருத்தமானதென அதுதொடர்பான விடயங்களைப் பரிசீலித்துப் பார்ப்பதற்காக நீதி அமைச்சர் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல்மயப்படுத்தல் மற்றும் நீதிமன்ற தானியங்கமயப்படுத்தல் தொடர்பான சட்டக்குழ மற்றும் குடியியல் சட்ட மறுசீரமைப்புக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறித்த பரிந்துரைகளின் அடிப்படையில் குடியியல் வழக்குக் கோவையை திருத்தம் செய்வதற்கும், அதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. குற்றவியல் வழக்குக் கோவை சட்டத்திருத்தம்

எதேனுமொரு நபர் குற்றமிழைக்கும் போது, குறித்த நபரின் வயது 18 வயதுக்குக் குறைவாயின் மரண தண்டனை வழங்குவதைத் தடை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான நீதி வழங்கலுக்கான உடன்பாட்டின் குறைந்தபட்ச ஒழுங்குவிதிகளுக்கு ஏற்புடையதாக அமையும் வகையில், குற்றவியல் வழக்குக் கோவை சட்டத்தின் 281 ஆம் உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. 2022.06.01 தொடக்கம் 2022.12.31 வரையான (07) ஏழு மாதகாலப்பகுதிக்கான மசகு எண்ணெய் இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தம் வழங்கல்

2022.06.01 தொடக்கம் 2022.12.31 வரையான (07) ஏழு மாதகாலப்பகுதிக்கான மசகு எண்ணெய் இறக்குமதிக்கான பெறுகைக் கோரலுக்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக விலைமுறிகள் கோரப்பட்டுள்ளது. குறித்த பெறுகையை ஐக்கிய அரபு இராச்சியத்தின் கொரல் எனேர்ஜி டீ.எம்.சீ.சீ கம்பனிக்கு வழங்குவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அப்பரிந்துரைகளின் பிரகாரம் குறித்த பெறுகையை அக்கம்பனிக்கு வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. வதிவிடமற்ற கம்பனிகளால் நல்லெண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் வதிவிடக் கம்பனிகள் மூலமாகப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள்

இலங்கையின் அந்நிய செலாவணி ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் ஊக்குவிப்புக்களுக்காக வதிவிடமற்ற முதலீட்டாளர்களால் வதிவிடக் கம்பனிகளின் பங்குகளைப் பெறுவதற்காக முதலீட்டாளரின் உள்வரும் முதலீட்டுக் கணக்கு ( Inward Investment Account – IIA ) ஊடாக பணம் அனுப்பாமல், கவனமின்மையாலோ அல்லது தெளிவில்லாமல் வதிவிடக் கம்பனிகளின் கணக்குகளுக்கு நேரடியாக மேற்கொள்ளப்படும் பண அனுப்பல்களுக்குப் பதிலாக குறித்த வதிவிடமற்ற முதலீட்டாளருக்குப் பங்குகளை வழங்கக் கூடிய வகையில் 2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் இலங்கையில் நிறுவப்பட்டுள்ள கம்பனிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு கட்டளைகளை வழங்குமாறு இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை நிதி அமைச்சருக்கு பரிந்துரைத்துள்ளது. அதற்கமைய, 2007 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 7(10) உறுப்புரையின் கீழ் குறித்த ஏற்பாடுகளை வெளியிடுவதற்காக நிதி அமைச்சர் அவர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பாக அமைச்சரவையின் உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

20. 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு வரி வருமானச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு வரிவருமானச் சட்டத்தின் ஏற்பாடுகளின் தெளிவுத்தன்மையை அதிகரிப்பதற்கும் மற்றும் சிக்கலான தன்மைகளை அகற்றுவதற்கும் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் சில நிதி அமைச்சரால் அடையாளங் காணப்பட்டுள்ளது. அவ்வாறே, பொருளாதார வளர்ச்சி காணும் துறைகளுக்கு சலுகைகளை வழங்கி முதலீடுகளையும் ஏற்றுமதிகளையும் ஊக்குவிப்பதுடன்,

வரி இணக்கங்களை அதிகரித்தல் மற்றும் வரி செலுத்தலை இலகுபடுத்தல் பற்றி பல்வேறு தரப்பினர் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையில் திருத்தங்கள் சிலவற்றை உள்நாட்டு வரிவருமானச் சட்டத்தில் அறிமுகப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அடையாளங் காணப்பட்டுள்ள திருத்தங்களை உட்சேர்த்து 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க சட்டத்தைத் திருத்தியமைப்பதற்காகவும், அதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 27 + = 36

Back to top button
error: