முல்லைத்தீவு மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம்
முல்லைத்தீவு மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டமானது மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நேற்று (15) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
மாவட்டத்தில் இடம்பெறுகின்ற போதைவஸ்து விநியோகம், சட்டவிரோத மணல் அகழ்வு, சமூக விரோத செயற்பாடுகள், வீதிகளில் நெல் உலரவிடுவதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், கட்டாக்காலி மாடுகளின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது
இவை தொடர்பில் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.மேலும் மாவட்டத்தின் போக்குவரத்து சேவைகளின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான தரிப்பிடத்திற்கு எரிபொருள் களஞ்சிய சாலைக்குரிய பொருட்கள் கிடைக்கப்பெற்றும் குறித்த வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெறாமையால் எரிபொரளை பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டியிருந்தனர். இது தொடர்பில் உரிய தரப்பினருடன் கதைப்பதுடன் இம் மாத இறுதியில் இடம்பெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் ஆலோசிப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், திட்டமிடல் பணிப்பாளர், கணிய வளங்கள் மற்றும் புவிசரிதவியல் திணைக்கள பொறியியலாளர் மயூரன், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர்கள், கடற்படை உயரதிகாரிகள், பொலிஸ் பிரிவுகளின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மதுவரி திணைக்கள அத்தியட்சகர், மாவட்ட தொற்றுநோயியல் வைத்திய அதிகாரி வைத்தியர் விஜிதரன், பிரதேச சபைகளின் செயலாளர்கள், போக்குவரத்து துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், மற்றும் கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.