யாழ் மாவட்டத்தில் செயற்கைக் கால் பொருத்தும் முகாம்
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே, யாழ்.மாவட்டத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் ஆகியோர் இணைந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜெய்ப்பூர் செயற்கைக் கால் பொருத்தும் முகாம் ஆரம்பித்து வைத்துள்ளனர்.
இந்திய அரசின் நிதியுதவியுடன், யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் வலுவிழந்தோருக்கு சேவை செய்யும் பகவான் மகா வீரர் சஹயட சமித்தி (BHAGWAN MAHAVEER VIKLANG SAHAYATA SAMITI) தொண்டு நிறுவனமும், யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு அலுவலகமும் இணைந்து நடாத்தும் “ஜெய்ப்பூர் செயற்கைக் கால் பொருத்தும் முகாம்” யாழ் மாவட்டத்தில் மார்ச் மாதம் 13ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை நடைபெறுகின்றது.
யாழ். மாவட்டச்செயலக முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெறும் இந்த முகாமில் கலந்துகொள்ளும் பயனாளிகள் தமது பதிவுகளை பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ள முடியும்.
நிகழ்வில், இந்திய தூதரக அரசியல் ஆலோசகர் பானு பிரகாஸ், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.முரளிதரன், பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.