அனைத்து அரச ஊழியர்களுக்கும் திருப்திகரமான தொழிலுக்கு அவசியமான பின்னணி தயார் செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.
ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக பதவி உயர்வு நடவடிக்கைகளில் நிலவுகின்ற பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
கொழும்பு தெமட்டகொடையில் அமைந்துள்ள புகையிரத திணைக்களத்தின் பிரதான பொறியியல் தள உப திணைக்களம் மற்றும் மாளிகாவத்தை புகையிரதத் தளத்தை நேற்று(16) பார்வையிட்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நிறுவனங்களின் நாளாந்த செயற்பாடுகளை அவதானித்த ஜனாதிபதி, தற்போதுள்ள பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் ஊழியர்களிடம் தகவல்களைக் கேட்டறிந்தார்.
வெற்றிடங்களாகும் தொழிநுட்பக் கடமைகளுக்கு, சிற்றூழியர்களை ஈடுபடுத்துதல் காரணமாக ஊழியர்களுக்கு மத்தியில் அதிருப்தி நிலை தோன்றியுள்ளதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். திறமையான இளம் தொழிலாளர்களை இலங்கை – ஜேர்மன் புகையிரத பயிற்சி நிறுவனம் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அனுப்பி, பயிற்சி வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுத்து அதற்கேற்ப முறையான பதவி உயர்வு முறையை உருவாக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.