காவத்தமுனை மக்களுக்கு குடிநீர்த் திட்டம்
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபர் மற்றும் காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலய பாடசாலை நிருவாகம் நீர் வழங்கல் அமைச்சுக்கு விடுந்த வேண்டுகோளுக்கிணங்க காவத்தமுனை பாடசாலை மற்றும் அதனைச்சூழவுள்ள பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீரை வழங்குவதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபர் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை அதிகாரிகளுக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற சிநேகபூர்வமான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் நீர்க் குழாய்கள் புதிதாக பதிக்கப்படுவதற்கான அகழி தோண்டும் நடவடிக்கைகளை பிரதேச சபையின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளது.
காவத்தமுனை வட்டார பிரதேச சபை உறுப்பினர்களான எம்.பீ.ஜெளபர், எம்.பி.சித்தி ஜெஸீமா ஆகியோர் தவிசாளரிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இவ்வேலைத்திட்டம் பாடசாலைக்கு மாத்திரமல்லாது கிராம மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.பீ.எம்.அலியார் தலைமையில் நேற்று முன்தினம் (18) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபர் கலந்து கொண்டார். ஏனைய அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதித்தவிசாளர் ஏ.ஜீ.அமீர் ஆசிரியர், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.எம்.ஹலால்தீன், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், நீர் வழங்கல் அமைச்சின் கல்குடாத்தொகுதி இணைப்பாளர் யூ.எல்.ஜவாத், சமூக அரசியல் செயற்பாட்டாளர் ஏ.முஸ்தபா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.