பெண்கள் காப்பக நிரந்தர கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டி வைப்பு
காத்தான்குடியில் பெண்கள் காப்பகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (26) சனிக்கிழமை காத்தான்குடி முதியோர் இல்ல வளாகத்தில் இடம்பெற்றது.
பாதிக்கப்பட்ட, பராமரிப்பு அற்ற கைவிடப்பட்ட சிறுமிகள், பெண்கள் மற்றும் வயோதிப முஸ்லிம் பெண்களுக்கான பாதுகாப்பு, என்பவற்றை குறிக்கோளாகக் கொண்டு கடந்த மூன்று வருடங்களாக தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வரும் பெண்கள் காப்பகத்திற்க்கான நிரந்தர கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்தக் கட்டிடத்தின் ஆரம்ப கட்டத்துக்கு காத்தான்குடி இமாஸா குழுமம் நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.ஜி.அஜ்வத் நிதியுதவி வழங்கியுள்ளதாக பெண்கள் காப்பகத்தின் தலைவியும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா. தெரிவித்தார்.
பெண்கள் காப்பகத்தின் தலைவியும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், முதியோர் இல்ல பொறுப்பாளர் ஓய்வு பெற்ற அதிபர் கே.எம்.ஏ அஸீஸ் காத்தான்குடி இமாஸா குழுமம் நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.ஜி.அஜ்வத் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டதுடன் உலமாக்கள்,பிரமுகர்கள், என பலரும் கலந்துகொண்டு கொண்டனர்.