பயங்கரவாதம், மத அடிப்படைவாதம் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தல்களிலிருந்து பிம்ஸ்டெக் பிராந்தியத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
‘பிம்ஸ்டெக்’ என்று அழைக்கப்படும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் 5 ஆவது மாநாடு உறுப்புநாடுகளைச் சேர்ந்த உயரதிகாரிகளின் பங்கேற்புடன் கடந்த திங்கட்கிழமை (28) கொழும்பில் ஆரம்பமானது.
இந்த மாநாட்டில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடா பிராந்திய பொருளாதாரங்கள் உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் இயந்திரங்களாக மாறியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்துகொள்ளும் ‘பிம்ஸ்டெக்’ 5 ஆவது உச்சி மாநாட்டிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமை தாங்குகிறார்.
பிம்ஸ்டெக் உயர் அதிகாரிகளின் கூட்டங்கள் நேற்று (29) மற்றும் நேற்று முன்தினம் (30) நடைபெற்றன.
இதற்கு இணையாக நேற்று வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.
மாநாட்டின் போது, ’பிம்ஸ்டெக்’ அமைப்பின் முன்னேற்றம் குறித்து பிராந்திய குழுவாக கலந்துரையாடப்பட்ட நிலையில் ‘பிம்ஸ்டெக்’ சாசனத்தை நிறைவேற்றல் மற்றும் பல சட்ட ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.