நுகேகொட ஜூபிலி தூண் பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் குழுவொன்று வன்முறைச் சூழலை ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இரும்புக் ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு, மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறையில் ஈடுபட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம் என கோசமிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலவரக்காரர்கள் திட்டமிட்ட வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தியுள்ளமை கைது செய்யப்பட்ட நபர்கள் மூலம் தெரியவந்துள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.