இலங்கையில் மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காத வகையில் வெடித்துவரும் நிலையில் இலங்கை அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்தது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தவிர அனைவருமே பதவி விலகியுள்ளனர்.
மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே, மகன் நமல் ராஜபக்சேவும் ராஜினாமா செய்துள்ளனர். மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததாக முதலில் தகவல் வெளியான நிலையில், பிரதமர் அலுவலகம் அதனை மறுத்தது.இந்நிலையில் பிரதமரும், ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து வருகின்றனர்.
முன்னதாக ஞாயிறு நள்ளிரவில் இலங்கை கல்வி அமைச்சர், அமைச்சரவை ராஜினாமாவை உறுதி செய்தார். பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டம், கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை அந்நியச் செலாவணி தட்டுப்பாடு மற்றும் கடும் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. உணவு, எரிபொருளுக்கு மக்கள் திண்டாடுகின்றனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது.
இதைக் கண்டித்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் கொளுத்தப்பட்டன. 5 போலீஸார் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமையன்று இரவு முதல் நாடு முழுவதும் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு இன்று (04) காலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது.
போராட்டம் பரவுவதைத் தடுக்க, பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டன. ஆனால் அதனால் எந்தப் பயனும் இல்லாத நிலையில், நேற்று ஞாயிறு பிற்பகலிலேயே அவை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.
இந்நிலையில், புதிய அமைச்சரவை அமைப்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். எதிர்கட்சி அரசியல் தலைவர்களும் இந்த போராட்டங்களில் பங்கெடுத்தனர்.
இதன் காரணமாக போராட்டங்களை தூண்டும் வகையிலும் நாட்டின் நிலைமை தொடர்பான தவறான தகவல்கள் பரப்பப்படும் முயற்சியை தடுக்கும் வகையிலும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை இலங்கை அரசு முடக்கியது. ஆனால், அடுத்த சில மணி நேரத்திலேயே அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.(இந்து)