தம்பலகாமத்தில் விளையாட்டு மைதான அபிவிருத்தி
திருகோணமலை – தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மெடியாவ வடக்கு கிராம சேவகர் பிரிவில் புதிய விளையாட்டு மைதானம் அபிவிருத்திக்கான அங்குரார்ப்பண வைபவம் இன்று (04) இடம்பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் ஏ.ஜி.சம்பிக்க பண்டார ஆகியோர் குறித்த மைதான அபிவிருத்தி வேலைகளை இன்று அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.
இத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் ஒரு மைதானம் என்றவாறு 11 மைதானங்கள் தெரிவு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இதற்காக ஒரு மைதானத்திற்கு இரண்டு மில்லியன் ரூபாய் வீதம் 22 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. மேலும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களுக்கும் ஒரு மைதானம் என்றவாறு 5 மைதானங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.ஒவ்வொரு மைதானத்துக்கும் தலா 4 மில்லியன் ரூபாய் அடிப்படையில் 20 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இளைஞர்களின் விளையாட்டு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இம் மைதானம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.இதில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், பிரதேச சபை உறுப்பினர் வஜிர மற்றும் உத்தியோகத்தர்கள், இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.