பிரதமர் இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி, பதவி இழந்தார்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்து பதவியை இழந்துள்ளார் . நள்ளிரவு வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக அதிக வாக்குகள் விழ, பாகிஸ்தான் பிரதமர் நாற்காலியில் இருந்து அகற்றப்பட்டுள்ளார் இம்ரான்.
கடந்த மார்ச் 28-ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டின் எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. தொடர்ந்து இம்ரான் கானின் பரிந்துரையின் பேரில், அந்நாட்டு அதிபர், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இதனால், பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு உருவானது. அதன் காரணமாக இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
வழக்கின் முடிவில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது நீதிமன்றம். அதன்படி, இன்று (10) நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு தொடங்கியது. தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோர் ராஜினாமா செய்ததாக சொல்லப்பட்டது.
நீண்ட இழுபறிக்கு பிறகு நள்ளிரவு 12.30 மணிபோல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தொடங்கியது. இதன் முடிவுகள் 1.30 மணிபோல் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 342 பேர் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 174 உறுப்பினர்கள் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதன்மூலம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் இம்ரான் கான்.
பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற பெயருக்கு ஆளானார் இம்ரான் கான். நாட்டின் புதிய பிரதமர் யார் நாடாளுமன்றம் கூடும்போது முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.(இந்து)