இன்று (13) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட 67 சுற்றிவளைப்புகளில், சட்டவிரோதமாக வைத்திருந்த 5,690 லீற்றர் பெற்றோல், 10,115 லீற்றர் டீசல், 5,620 லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ,
சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்தல், சேமித்து வைத்தல், விற்பனை செய்தமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கமைய, இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை, பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் நாடு முழுவதும் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
அதற்கமைய, நேற்று (12) மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட 67 சுற்றிவளைப்பில், சந்தேகநபர்களுடன் 5,690 லீற்றர் பெற்றோல், 10,115 லீற்றர் டீசல் மற்றும் 5,620 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக விரைவில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்காக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன நிபுணர்களின் ஆலோசனைகளையும் உதவிகளையும் தொடர்ச்சியாக வழங்க முன்வந்துள்ளனர்.
இதேவேளை, எரிபொருளை சட்டபூர்வமாக மாத்திரம் பெறுமாறும், பயன்படுத்துமாறும் பொதுமக்களை கேட்டுக் கொள்வதாக, நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
இதன்மூலம், அதிக விலைக்கு விற்கப்படும் பொருட்களை சேமித்து வைப்பதையும், பதுக்கி வைத்திருப்பதையும் பொலிசார் தொடர்ந்து கண்காணித்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது நீங்கள் ஏதேனும் ஒரு வகையில் கைது செய்யப்பட்டால், உங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.