தமிழரது 60 வருட சக்கரத்தில் 36ஆவது ஆண்டான சுபகிருது வருடம் இன்று பிறக்கிறது.வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, இன்று (14) காலை 7.50 இற்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம் காலை 8.41 இற்கும் சுபகிருது வருஷம் பிறப்பதாக சோதிடர்கள் அறிவித்துள்ளனர்.
வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம், சிவப்பு அல்லது மஞ்சள் நிறப் பட்டாடையோ, சிவப்புக் கரை அமைந்த பட்டாடையோ அணிதல் சிறப்பு. மஞ்சள் நிறப் பட்டு அல்லது மஞ்சள் கரை கொண்ட வெள்ளை வஸ்திரத்தை அணிவது நல்லதென திருக்கணித பஞ்சாங்கம் கூறுகிறது.
வாக்கிய பஞ்சாங்கத்தின் படிஇன்று அதிகாலை 3.50 முதல் முற்பகல் 11.50 வரை விஷூ புண்ணியகாலமாகும். திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம், அதிகாலை 4.41 முதல் நண்பகல் 12.41 வரை விஷூ புண்ணிய காலமெனக் குறிப்பிடப்படுகிறது.
இந்தக் காலப் பகுதியில், வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் தலையில் கடம்பம் இலையையும், காலில் கொன்றை இலையையும் வைத்து நீராடுதல் நலம். தலையில் கொன்றை இலையையும், காலில் புங்கம் இலையையும் வைத்து நீராடுதல் சிறப்பென திருக்கணித பஞ்சாங்கம் கூறுகிறது.
வாக்கிய பஞ்சாங்கம் கைவிஷேசத்திற்கு உகந்த நேரங்களாக, இன்று காலை 7.57 முதல் 8.47 வரையிலும், வெள்ளிக்கிழமை காலை 7.52 முதல் 9.51 வரையிலும், வெள்ளி இரவு 6.12 முதல் 8.12 வரையிலுமான காலப் பகுதிகளைக் குறிப்பிடுகிறது.
திருக்கணித பஞ்சாங்கம் இன்று முற்பகல் 8.50 முதல் 9.42 வரையிலும், வெள்ளிக்கிழமை முற்பகல் 8.35 முதல் 9.50 வரையிலான காலப் பகுதிகளையும் கைவிசேஷத்திற்கு உகந்த நேரங்களாகக் கூறுகிறது.