பொருளாதார நெருக்கடியின்போது, வேறுபாடுகளைக் கடந்து நடக்கும் போராட்டங்களின்போதுதான் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது என்கிறார் போராட்டங்களில் பங்கேற்கும் ஆட்டோ ஓட்டுநரான ஜெகன்.
சிலமாதங்களுக்கு முன்பிருந்தது போல அவரது வாழ்க்கை இப்போது இல்லை. இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி சாமானிய மக்களை கூடுதலாகப் பாதித்திருக்கிறது என்பதற்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு.
இலங்கை காலி முகத் திடலில் அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டம் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்திருக்கிறது. வார இறுதி நாள்களில் மற்ற நாள்களை விட கூட்டம் அதிகமாக இருக்கிறது. ஜெகனும் அவ்வப்போது அங்கு சென்று போராட்டத்தில் பங்கேற்கும் நபர்களில் ஒருவர்.
“மலையகத்தில் இருந்து வந்து சுமார் 12 ஆண்டுகளாக கொழும்பு நகரில் ஆட்டோ ஓட்டுகிறேன். சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது. பெட்ரோல் விலை, அத்தியவசியப் பொருள்களின் விலை ஆகியவை வாழ்க்கையை மோசமாகப் பாதித்திருக்கிறது” என்கிறார் ஜெகன்.
தற்போதைய சூழல் அவரை இரண்டு புறங்களில் இருந்து அழுத்துகிறது. ஒருபுறம் பெட்ரோல் விலை உயர்வால் வருமானம் குறைந்துவிட்டது. மறுபுறம் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பால் அவற்றை போதுமான அளவு வாங்க இயலவில்லை.
“ஆட்டோவுக்கு பெட்ரோல் போடுவதற்கு பல மணிநேரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 340 ரூபாய். முன்பெல்லாம் 5 கிலோ மீட்டருக்கு ஓட்டினால் 300 ரூபாய் வரை கிடைக்கும். இப்போது கட்டணத்தில் பெரிய வித்தியாசமில்லை. 360 ரூபாய்தான் கிடைக்கிறது. ஆனால் 140 ரூபாய்க்கு விற்ற பெட்ரோலின் விலை இரண்டு மடங்கையும் தாண்டி விட்டது.”
“இலங்கையில் மொத்தம் 15 லட்சம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. கொழும்புவில் மட்டும் 5 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள் இருக்கிறார்கள்.” என்கிறார் கொழும்பு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் தேவானந்த சுரவீர.(பிபிசி)