இரண்டாவது முறையும் பிரான்ஸ் ஜனாதிபதியாக இமானுவேல் மேக்ரான் தேர்வு
பிரான்ஸ் ஜனாதிபதியாக இமானுவேல் மேக்ரான் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் அதிபர் தேர்தல் இரண்டு சுற்றுகளாக நடத்தப்படுவது வழக்கம். இதில், ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 12 பேர் போட்டியிட்டனர்.
முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் 50%க்கும் மேல் வாக்குகளைப் பெறாத நிலையில் முதல் இரு இடங்களைப் பெறுவோர் இடையே இரண்டாவது சுற்று தேர்தல் நேற்று (ஏப். 24-ம் தேதி) நடந்தது. இந்நிலையில் நேற்றைய 2 ஆம் சுற்று தேர்தலில் மேக்ரான் 58% வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தீவிர வலதுசாரியான லீ பென் 42% வாக்குகளும் பெற்றனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவியை பிடித்த பெருமையைப் பெற்றுள்ளார் மேக்ரான். இமானுவேல் மேக்ரான் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வருகிறார். அவருடைய புதிய பதவிக்காலம் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கும்.
இதற்கிடையில், இமானுவேல் மேக்ரானின் வெற்றியை எதிர்த்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் மீது அதிரடிப்படை போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் தேர்தலில் மேக்ரான் 52 சதவீதம் என்றளவில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்தாலும் கூட இத்தேர்தலில் வாக்களிப்பை புறக்கணித்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.(இந்து)