கொழும்பு கொள்ளுபிட்டிய மைனாகோகம மற்றும் காலிமுகத்திடல் கோட்டாகோகம போராட்டத்தின் மீது, அலரி மாளிகைக்குள் திட்டமிட்டு குண்டர்கள் வரவழைக்கப்பட்டு தாக்குதலை திட்டமிட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க பொலிஸ்மா அதிபரிடம் இன்று (10) கோரிக்கை விடுத்துள்ளார்
கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (10) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இந்த கோரிக்கையை இன்று விடுத்தார்.
அலரி மாளிகைக்குள் செல்லும்போது அவர்களிடம் வாள், பொல்லுகள் என்பன இருக்கவில்லை எனவும் அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் வௌியே வரும்போது பாரிய அளவிலான வாள்கள், பொல்லுகளை ஊடகங்கள் வாயிலாக காணக்கூடியதாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
கொழும்பு கொள்ளுபிட்டிய மைனாகோகம மற்றும் காலிமுகத்திடல் கோட்டாகோகம போராட்டத்தின் மீது தாக்க சென்றதையும் காணக்கூடியதாக இருந்ததாக சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தெரிவித்தார்.
போராட்டத்தின் மீது தாக்க சென்றபோது புலனாய்வு அதிகாரிகள் எங்கு சென்றார்கள் என அவர் கேள்வியெழுப்பியதுடன், போராட்டக்களத்தில் தாக்குதல் மேற்கொள்வதற்கு பொலிஸார் இடமளித்ததாகவும் அவர் கூறினார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டிய வன்னிநாயக்க, இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களும் உதவியதாக தெரிவித்தார்.
திட்டமிட்டு தாக்குதல் நடத்திய குழுவிற்கு எதிராக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என சட்டத்தரணி வன்னிநாயக்க மேலும் தெரிவித்தார்.