பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு அதிகரிப்பு, 6 பொலிஸார்
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதன்படி ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 6 பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வீதம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உள்ளிட்ட 6 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பிரதேச பொலிஸ் நிலையங்களில் தற்போது கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் தமக்கு விருப்பமானவர்களை அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் இணைத்துக்கொண்டு தமது பாதுகாப்பு சேவைகளுக்கு அவர்களை ஈடுபடுத்திக் கொள்ள கூடிய வாய்ப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 09 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் அவர்களின் வீடுகளின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் மரணமடைந்துள்ளதை கவனத்திற் கொண்டே பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு பொலிஸ் மாஅதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்