தென் ஆப்பிரிக்கா பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்று புதிய உலக சாதனை
7 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள், தாயும் குழந்தைகளும் நலம்
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்று புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா நாட்டின் கவ்டேங் மாகாணத்தில் உள்ள டெம்பிஸா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் டெபோகோ சொடேட்ஸி – கோஸியாமே தமாரா தம்பதி. 7 வருடங்களுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு 6 வயதில் ஏற்கெனவே இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே, 37 வயதான கோஸியாமே தமாரா, சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் கர்ப்பம் தரித்தார். ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது கர்ப்பப்பையில் 8 குழந்தைகள் இருந்தது தெரியவந்தது. இதனால் தம்பதியினர் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். இருந்தபோதிலும், 8 குழந்தைகளும் எந்தவித குறைபாடும் இல்லாமல் பிறக்க வேண்டுமே என்ற கவலையும் அவர்களுக்கு இருந்தது.
இந்நிலையில், கோஸியா மேவுக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக, ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்தார் கோஸியாமே. இவற்றில் 7 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் ஆவர். தற்போது தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாக அவரது கணவர் டெபோகோ தெரிவித்தார்.
இதற்கு முன்பாக, மாலி நாட்டைச் சேர்ந்த பெண் கடந்த மாதம் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்று உலக சாதனை படைத்தார். தற்போது இந்த சாதனையை கோஸியாமே முறியடித்திருக்கிறார். கோஸியாமேவின் சாதனை கின்னஸ் புத்தகத்தில் விரைவில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.(இந்து)