பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ அவர்கள் பிரதி சபாநாயகராக இன்று (19) பிரதி சபாநாயகர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னாள் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்கள் தனது பதவியிலிருந்து இராஜினாமாகச் செய்தைதத் தொடர்ந்து புதிய பிரதிச் சபாநாயகர் பதவிக்கு இரண்டு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு கடந்த 17ஆம் திகதி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 31 மேலதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்ட அஜித் ராஜபக்ஷ 29வது பிரதிச் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்.
அஜித் ராஜபக்ஷ அவர்கள் கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். இவர் ஹம்பாந்தோட்டை, ஹங்கம விஜயபா தேசிய பாடசாலையின் பழைய மாணவராவார்.
அஜித் ராஜபக்ஷ 1997 ஆம் ஆண்டு அம்பலாந்தோட்டை பிரதேச சபையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதுடன், இலங்கையின் மிகவும் இளமையான பிரதேச சபைத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார். இதன் பின்னர் 1999ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தென் மாகாண சபை உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
அன்றிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரை சுமார் 21 வருடங்கள் மாகாண சபை உறுப்பினராக தென் மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய அவர் 1999 ஆம் ஆண்டு இலங்கையின் இளைய மாகாண சபை உறுப்பினர் என்ற தேசிய இளைஞர் விருதைப் பெற்றார். தென் மாகாண சபையின் ஆளும் கட்சியின் முதற்கோலாசானாகவும் கடமையாற்றியுள்ளார்.
பிரதி சபாநாயகரின் பதவியேற்பு நிகழ்வில் முல்கிரிகல மெட்டிகன்னல ரம்பா ரஜமஹா விகாரையின் விஹாராதிபதியும், மாத்தறை ஹம்பாந்தோட்டை பிரதேசத்தின் பிரதான சங்கநாயக்கருமான வெலிகல்ல சரணபால தேரர், இத்தாலியின் பிரதான சங்கநாயக்கரும் அம்பலாந்தோட்டை தேரபுத்தபாய ரஜமஹா விகாரையின் விகாராதிபதியுமான பெலிகலை சரணபால தேரர், மேல் மாகாண பௌத்த அலுவல்கள் பணிப்பாளர் ஹத்தகல ரஜமஹா விகாரையின் தலைவர் ஆகியோர் தலைமையில் மத நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில், குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, டி.வி.சானக, யாதாமினி குணவர்தன, குணதிலக்க ராஜபக்ஷ, சிசிர ஜயக்கொடி, சமன்பிரிய ஹேரத், டீ. வீரசிங்ஹ, அரவிந்த குமார், ஜகத் புஷ்பகுமார, சந்திம வீரக்கொடி, வை.ஜீ. ரத்னசேகர, (வைத்தியகலாநிதி) உபுல் கலப்பத்தி மற்றும் மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க மற்றும் அஜித் ராஜபக்ஷ அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.