கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
க. பொ. த சாதாரண தரப் பரீட்சை நாளை (23) ஆரம்பம், சாதாரண தரப் பரீட்சை, நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 844 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. ஐந்து லட்சத்து 17 ஆயிரத்து 496 பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இதில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 129 பேர் பாடசாலைப் பரீட்சார்த்திகளாவர்.
பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டை தற்போதைக்கு பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு தனியார் பரீட்சார்த்திகளுக்கும் பரீட்சை அனுமதி அட்டை கிடைக்கவில்லை எனின், கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளத்திற்கு பிரவேசித்து தங்களின் அனுமதிஅட்டையினை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சை அனுமதி அட்டையில் ஏதாவது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத் தளத்திற்குள் பிரவேசித்து திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிரிதியினை அனுமதி அட்டையுடன் இணைத்து பரீட்சை நிலையப் பொறுப்பு அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அனுமதி அட்டையில் தான் பரீட்சைக்கு தோற்றும் மொழி மற்றும் பாடங்களில் பிரச்சினை இருப்பின் அது பற்றி தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இதற்கான தொலைபேசி இலக்கங்கள் – 0112 284 208 அல்லது 0112 784 537.