crossorigin="anonymous">
ஆக்கங்கள்

பலாங்கொடையின் ஆளுமை தேசகீர்த்தி அல்ஹாஜ் எம்.ஜே.எம்.மஹ்தூன்

பலாங்கொடை பள்ளிகள் பரிபாலன சபையின் தலைவர் தேசகீர்த்தி அல்ஹாஜ் எம்.ஜே.எம்.மஹ்தூன் (JP) அவர்கள் 12/05/2022 அன்று வியாழக்கிழமை இறையடி சேர்ந்தார்கள், இன்னாலில்லாஹி வ இன்னாஹ் இழைகி ராஜிவூன்

ஆளுமை மிக்க இம்மனிதரைப் பற்றி எடுத்துக் கூறுவதன் நோக்கம் மற்றவர்களுக்கும் ஒரு படிப்பினையாக அமையும் என்பதைத் தவிர வேறேதும் இல்லை.

மர்ஹூம். தேசகீர்த்தி அல்ஹாஜ் எம்.ஜே.எம்.மஹ்தூன் இரத்தினபுரியை சேர்ந்த எம்.ஜெமால்தீன் ஜெமீலா உம்மா ஆகியோருக்கு இரண்டாவது மகனாக 1950/06/16 ஆம் திகதி பிறந்தார். ஆரம்பக் கல்வியை இரத்தினபுரி சீவலி வித்தியாலயத்தில் பெற்ற்றுக் கொண்ட இவர் இளம் வயதிலிருந்து வர்த்தக துறையில் ஈடுபட்டார்.

வாலிப வயதில் பலாங்கொடையைச் சேர்ந்த சித்தி அசீமாவை தனது வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் மூன்று மகள்களும் பிறந்தனர். அதன் பின்னர் பலாங்கொடையை தனது வசிப்பிடமாகக் கொண்டு இரத்தினக் கல் வியாபாரத்தில் ஈடுபடத் தொடங்கினார் குறுகிய காலத்திலேயே நாடறிந்த பிரபல இரத்தினக்கல் வர்த்தகராக மிளிர்ந்தார்.

ஆரம்பகாலம் தொட்டு பொதுச் சேவைகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு செயற்பட்டமையால் மஹ்தூன் ஹாஜியார் என்ற பெயர் நாமத்தால் அனைத்தின மக்களாலும் அன்பாக அழைக்கப்பட்டார். பிரதி உபகாரம் எதிர்பாராமல் தனது சொந்தப் பணத்தை ஊர் நலனுக்காகவும் மக்களுக்காகவும் தாராளமாக வாரி வழங்கி சேவையாற்றினார்.

ஊர் தனவந்தர்களுக்கு மத்தியில் தன்னிகரற்றவராக நிகழ்ந்த மர்ஹூம் அல்ஹாஜ் எம்.ஜே.எம்.மஹ்தூன் அவர்கள் ஆரம்பத்தில் பலாங்கொடை பள்ளிகள் பரிபாலன சபையின் உறுப்பினராக 1983 ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 1996 ஆம் ஆண்டு முதல் பலாங்கொடை பள்ளிகள் பரிபாலன சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார், அவர் இறையடி சேரும் வரையில் பள்ளிகள் பரிபாலன சபையின் தலைவராக இருந்து சேவையாற்றி வந்தார்.

இறுதியாக நடைபெற்ற பள்ளிகள் பரிபாலன சபை தெரிவுகள் மூன்றின்போதும் தான் ஓய்வு பெற வேண்டும் என மக்களிடம் தெரிவித்து ஓய்வு பெற முயற்சி செய்தார் இருந்தபோதும் மக்கள் அவரின் சேவை தொடர்ந்தும் தேவை என்றும். அவரே தலைவராக இருக்க வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் அவரையே தெரிவு செய்தமை விசேட அம்சமாகும்

ஊரின் கல்வி வளர்ச்சிக்காக எப்போதும் அக்கறையுடன் முன்னின்று உழைத்து வந்தார். 1985/03/30 அன்று இர/ஜெய்லானி மத்திய கல்லூரிக்கு பல இலட்சம் ரூபா செலவில் நூலகம் மற்றும் நிர்வாக கட்டடத்தொகுதி ஒன்றினை தனது சொந்த செலவில் அமைத்துக் கொடுத்தார் இன்று அதன் பெறுமதி பல கோடிகள்

பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் பல்வேறு வழிகளில் சேவைகள் ஆற்றி வந்துள்ளார் பாடசாலையில் நடைபெறும் அனைத்து வைபவங்களிலும் பங்குகொள்ளும் அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் என அனைவருக்கும் தனது வீட்டில் விருந்துபசாரம் வழங்குவதை வழமையாக கொண்டிருந்தார்.

ஏன் இப்படியெல்லாம் செலவு செய்கிறீர்கள் என ஒருமுறை அவரிடம் வினவப்பட்டபோது எனக்காக அல்லது பெருமைக்காக செய்யவில்லை.எமது பாடசாலைக்கு மற்றும் சமூகத்திற்கு இதன்மூலம் ஏதாவதொரு பயன்கிட்டும் என்பதாலேயே இதனைச் செய்கிறேன்.என பதிலளித்தார்.

பலாங்கொடை கல்வி வலயத்தில் வசதி குறைந்த வறிய உயர்தரம் கற்கும் மாணவர்கள் 10 பேரை தெரிவு செய்து அம்மாணவர்களுக்கு புலமைப் பரிசிலாக மாதாமாதம் இரண்டாயிரம் ரூபா வீதம் 2020 ஆம் ஆண்டு வரையில் வழங்கி வந்தமை நினைவு கூற வேண்டிய விடயமாகும்

பலாங்கொடையின் மிக நீண்ட கால தேவையாக இருந்து வந்த ஜூம்மா பள்ளிவாசல் நிர்மாணம் இவருடைய தலைமையிலேயே இடம்பெற்றது. ஊர் தனவந்தர்கள் ஊர் மக்கள் அனைவரினதும் பங்களிப்புடன் தனது கூடுதலான பங்களிப்பையும் வழங்கி சகல வசதிகளுடன் கூடிய ஜூம்மா பள்ளிவாசல் நிர்மாணம் ஆரம்பிக்கப்பட்டது இதன்போது ஒவ்வொரு நாளும் ஸ்தலத்திற்கு வருகை தந்து பள்ளிவாசல் நிர்மாணப் பணிகளை முழுமையாக அவதானித்தார்

பலாங்கொடையில் கூட்டு ஸகாத்தை அறிமுகப்படுத்திய பெருமையும் இவரையே சாரும் முதன்முதலாக கூட்டு ஸகாத் மூலம் காணி கொள்வனவு செய்யப்பட்டு சுமார் 200 குடும்பங்களுக்கு அவை முறையாக பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் 20 வீடுகள் நிர்மாணம் செய்து கொடுக்கப்பட்டது. பள்ளிகள் பரிபாலன சபையின் கீழ் கல்வி அபிருத்திக் குழு.பைத்துல் ஸகாத். பைத்துல் மால் போன்றனவும் உருவாக்கப்பட்டு சேவையாற்றி வருகிறது

இதேபோல் பள்ளி வாசல்களின் நிரந்தர வருமானத்திற்காக வர்த்தக கட்டடத்தொகுதி.திருமண மண்டபம் என்பன நிர்மாணிக்கப்பட்டது இதேபோல் அன்னாரின் வசிப்பிடமான தும்பகொடையில் பள்ளிவாசல் நிர்மாணம். தெஹிகஸ்தலாவையில் தாருல் ஹிக்மா பாலர் பாடசாலை நிர்மாணம் என்பனவும் மர்ஹூம் அல்ஹாஜ் எம்.ஜே.எம். மஹ்தூன் அவர்களால் நிர்மாணிக்கப்பட்டது.

நாட்டில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களின் போதெல்லாம் பாதிப்படையும் மக்களுக்கு ஜாதிமத பேதமின்றி உதவிகள் செய்து வந்துள்ளார். கோரமான சுனாமி அனர்த்தத்தின்போது பலாங்கொடை சமூகத்திடம் இருந்து பணம்.பொருள் சேகரிக்கப்பட்டு அவைகளை இரண்டு லொரிகளில் கிழக்கு மாகாண மக்களுக்கு அனுப்பி வைத்தார். சுனாமியால் பாதிப்படைந்த ஹம்பாந்தொடை பகுதியில் சடங்களை மீட்பதற்காக பலாங்கொடையில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்களை அனுப்பி வைத்தார்.

மர்ஹூம் அல்ஹாஜ் எம்.ஜே.எம்.மஹ்தூன் அவர்கள் ஆற்றிய சேவைகளில் ஒரு சிலவற்றையே என்னால் சேகரிக்க முடிந்தது. அன்னார் உயிருடன் இருந்திருந்தால் இவற்றை எழுத விட மாட்டார், சேவைகள் யாவும் அல்லாஹ்வின் திருப்திக்காக மட்டுமே என எப்போதும் கூறுவார்.

அல்லாஹ் வழங்கிய செல்வத்தை தனது குடும்பத்திற்கு மாத்திரமின்றி ஏழை எளியவர்களுக்கு. முஸ்லிம் சமூகத்திற்கு. ஊர் நலனுக்கு என ஆகுமான அனைத்து வழிகளிலும் செலவு செய்தார். யாஅல்லாஹ் அன்னாருடைய பாவங்களை மன்னித்து. அவர் செய்த சேவைகள் அனைத்தையும் அங்கிகரித்து மேலான ஜென்னதுள் பிர்தெளஸ் சுவர்க்கத்தை வழங்குவாயாக, ஆமீன்.

ஆக்கம்:- எம்.எஸ்.எம்.நதீர்
பலாங்கொடை

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 49 − 48 =

Back to top button
error: