
இலங்கை பாராளுமன்ற கோப் குழுவில் முன்னிலையில் இம்மாதம் கடந்த வெள்ளிக்கிழமை (10) இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ, மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்துவதாக ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாக தெரிவித்திருந்தார்.
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோவின் இக் கருத்து பல்வேறு அரசியல் மட்டத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது
இந்நிலையில், இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ குறித்த கருத்தை வாபஸ் பெறுவதாக நேற்றுமுன்தினம் (11) அறிவித்திருந்தார்.
மின்சார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதன் வேலைப்பளு காரணமாக உணவு கூட உட்கொள்ளாமல் செயற்பட்டமையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தன்னால் அவ்வாறான கருத்து வௌியிடப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
ஜனாதிபதியோ, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரோ அல்லது இந்திய தூதரகத்தினாலோ தாம் கருத்தை வாபஸ் பெறும் நிலைப்பாட்டிற்கு அழுத்தம் விடுக்கப்படவில்லை எனவும் அவர் அறிவித்திருந்தார்.
இதேவேளை, மன்னாரில் நிர்மாணிக்க திட்டமிடட்டுள்ள காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தை கையளிப்பது தொடர்பில் தாம் எந்தவொரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ அழுத்தங்களை விடுக்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (13) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மின்சார சபையின் உப தலைவர் நலிந்த இளங்ககோன் புதிய தலைவராக இன்று (13) நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
I have accepted the letter of resignation tendered to me by the CEB Chairman Mr MMC Ferdinando. Vice Chairman Nalinda Ilangaokoon will take over as the New Chairman CEB.
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 13, 2022