காத்தான்குடி ஹாஜாஜீ மாகந்தூரி பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆஹ் பள்ளிவாயலில் 36வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி பெருவிழாவானது நேற்று முன்தினம் (17) திருக்கொடியேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட 36வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி பெருவிழாவானது இன்று (19) வரை மஜ்லிஸ்கள் பல இடம்பெற்று பொதுமக்களுக்கு கந்தூரி உணவு விநியோகத்துடன் முடிவடையவுள்ளது.
இதன் முதல் நிகழ்வாக அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து ரபான் முழங்க வரவேற்கப்பட்டதுடன், அதிதிகளினால் தேசியக் கோடியேற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிதிகளின் பங்குபற்றுதலுடன் 36வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி பெருவிழாவுக்கான திருக்கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது.
இதன்போது எமது நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர விஷேட துஆ பிரார்த்தனையோன்றும் நடைபெற்றது.
பத்ரிய்யஹ் ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் மௌலவி ஏ.ஜே.அப்துர் ரஊப் (மிஸ்பாஹி) தலைமையில் இடம்பெற்ற திருக்கொடியேற்ற பெருவிழாவில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் இணைச் செயலாளர் ஆர்.அசோக் குமார், 231வது இராணுவ படை பிரிவின் கட்டளைத் தளபதி டிலுப பண்டார, களுவாஞ்சிக்குடி விஷேட அதிரடிப்படை அதிகாரி பீ.பிரேமரத்ன அகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் இதன்போது பள்ளிவாயல் நம்பிக்கை சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.