மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு நேற்று (11) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது . இதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 23/06/2021 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து, சி.ஐ.டி. யினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து, தலா 500 கோடி ரூபா நட்டஈடு பெற்றுத் தரக் கோரி, உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ள வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் சி.ஐ.டி. யில் இருப்பின், அவற்றை ஒரு வாரத்தில் உயர் நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் அறிவித்தார்.
அரசியலமைப்பின் 17 மற்றும் 126 ஆவது உறுப்புரைக்கு அமைய, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக, ரிஷாட் பதியுதீன், ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தனித் தனியாக தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நேற்று (11) உயர் நீதிமன்றில் நீதியரசர் எல்.ரி.பி.தெஹிதெனிய, ப்ரீத்தி பத்மன் சுரசேன, ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு வந்தது.
இம்மனுக்களில் முதலில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட எஸ்.சி.எப்.ஆர். 152/2021 எனும் மனு பரிசீலிக்கப்பட்டது. இதில் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனை பிரகாரம், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆகியோர் ஆஜராகினர்.
ரியாஜ் பதியுதீன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எஸ்.சி.எப்.ஆர். 153/2021 எனும் மனு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன ஆகியோர் ஆஜராகினர்.
இவ்விரு மனுக்கள் தொடர்பிலும் சட்ட மா அதிபர் சார்பில், சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோனும், சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேராவும் முன்னிலையானர்.
இதன்போது, மனுதாரர்கள் சார்பில் வாதங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய பல ஆவணங்கள் சி.ஐ.டி. யின் பொறுப்பில் உள்ள நிலையில், அவற்றை நீதிமன்றில் பாரப்படுத்த உத்தரவு ஒன்றை விடுக்குமாறு கோரினார்.
இதன்போது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன், சி.ஐ.டி. யில் அவ்வாறான ஆவணங்கள் இருப்பின், அவற்றை ஒரு வாரத்துக்குள் மன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையிலேயே, விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், குறித்த மனுக்களை அவசர நிலை மனுக்களாகக் கருதி, எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுக்க உத்தரவிட்டது.
இதன்போது, சிரேஷ்ட சட்டத்தரணி சஹீட் மற்றும் சட்டத்தரணி அமீர் அலி ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.