இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரைக்கமைய இலங்கை இராணுவ தலைமையகம் குருணாகல் – யக்கபிட்டியவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை எட்டி உதைத்த இராணுவ அதிகாரி அனைத்து கடமைகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நேற்று (05) தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முடியும் வரை லெப்டினண்ட் கேர்ணல் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
05 பேர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தின் பரிந்துரைகள் வரும் வரை குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரி அனைத்துப் பணிகளிலிருந்தும் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இராணுவ அதிகாரி ஒருவர், பொதுமகன் ஒருவரை எட்டி உதைத்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.