அபிவிருத்தி பணிகளுக்கு நிதியொதுக்கீடு சிக்கல் – அமைச்சர்
பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள குறைநிரப்பு மதிப்பீட்டின் ஊடாக நகர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கப்படமாட்டாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று முன்தினம் (05) பாராளுமன்றத்தில் கூடியபோது எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நிதியொதுக்கீடு செய்வது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறும், தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களை நஷ்டம் ஏற்படாத வகையில் தற்காலிகமாக நிறுத்துமாறும் திறைசேரி அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், குறைநிரப்பு மதிப்பீட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னரே அதனை சரியாகக் கூற முடியும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.