பொலிஸ் ஊரடங்கு – இலங்கை பொலிஸ் தலைமையகம்
இலங்கை பொலிஸ் தலைமையகம் இன்று (08) இரவு 9.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை, மேல் மாகாணத்தில் நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிஸ்ஸை, கொழும்பு வடக்கு, தெற்கு, மத்தி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.
இலங்கை பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவினால் இந்த அறிவிப்பு இன்று வௌியிடப்பட்டுள்ளது
ஊரடங்கு தொடர்பில் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள குறித்த அறிவித்தலுக்கமைய, குறித்த பொலிஸ் பிரிவுகளில் உள்ளவர்கள் தமது வீட்டிலேயே இருக்க வேண்டுமெனவும், பொலிஸ் ஊரடங்கை மீறுவது, பொதுமக்கள் பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்வதை தடுப்பதாக அமையுமென கருதி, இறுக்கமாக சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி நாளையதினம் (09) சனிக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.