‘நிலையான அரசாங்கம் இல்லையெனின் செயலிழக்கும் நிலை’ – மத்திய வங்கி ஆளுநர்
இலங்கையில் நிலையான அரசாங்கமொன்றை விரைவில் அமைக்கத் தவறினால், இலங்கை செயலிழந்த நிலைக்கு தள்ளப்படும் என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் இருக்க ஜனாதிபதி-பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டும் எனறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொள்ளவது நிச்சயமற்ற சூழ்நிலையாக மாறியுள்ளது என்று பி பி சி க்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்க உள்ள கடன் தொகையை பெறுவது கூட தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மாதத்தில் கிடைக்க உள்ள சில டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்களுக்கு செலுத்த பணம் இருப்பதாகவும், ஆனால் அதையும் தாண்டி பெரும் நிச்சயமற்ற நிலையொன்று இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.