இலங்கையில் இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான வேட்புமனுக்களை ஏற்றுகக்கொள்வதற்காக இலங்கை பாராளுமன்றம் இன்று (19) கூடுகிறது.
இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 14ஆம் திகதி முதல் இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, கடந்த 16 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்
இலங்கை இடைக்கால ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்கள் இன்று ஜூலை 19 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு உத்தியோகபூர்வமாக கடந்த 16 ஆம் திகதி அறிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் வேட்புமனுக்களை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்ற செயலாளர் நாயகம் இன்று தெரிவத்தாட்சி அதிகாரியாக செயற்படுவார்.
இலங்கை மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறியிருந்த கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 14ஆம் திகதி முதல் இராஜினாமா செய்து, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி இருப்பதால் இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு பாராளுமன்றத்தில் நாளை (20) இரகசிய வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை தெரிவத்தாட்சி அதிகாரியாக செயல்படும் பாராளுமன்றச் செயலாளர் நாயகம், அறிவிக்க வேண்டும். இதனை மற்றொரு பாராளுமன்ற உறுப்பினர் வழிமொழிவார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் ஈடுபட முடியாது.
இதுவரையில் இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கு ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க, டளஸ் அழகப்பெரும ஆகியோர் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளனர்.