crossorigin="anonymous">
பொது

பாராளுமன்ற சபை முதல்வராக சுசில் பிரேமஜயந்த

ஆளும்கட்சியின் முதற்கோலாசான் பதவிக்கு பிரசன்ன ரணதுங்க

பாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக கல்வி அமைச்சர் (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று, பாராளுமன்ற ஆளும்கட்சியின் முதற்கோலாசானாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனங்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து இன்று (27) வழங்கப்பட்டன.

இலங்கை பாராளுமன்றத்தின் 18வது சபை முதல்வரான (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, நுகேகொட புனித ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்றுள்ளதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட பட்டதாரியாவார்.

1984 இல் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துள்ள அவர் 1991 ஆம் ஆண்டில் கோட்டே மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்டு முதல் முறையாக அரசியலுக்குப் பிரவேசித்தார்.

1993 இல் மேல் மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட அவர் 1995 இல் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டார்.

2000 ஆம் ஆண்டில் பாராளுமன்றத் தேர்தலில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட சுசில் பிரேமஜயந்த, தற்போதைய அரசாங்கத்தில் கல்வி அமைச்சுப் பதவியை வகிப்பதுடன், இதற்கு முன்னர் தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி, சுற்றாடல் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பெற்றோலிய தொழிற்றுறை, மின்சக்தி மற்றும் வலுசக்தி போன்ற அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும் நீண்ட காலம் சேவையாற்றியுள்ளார்.

ஆளும்கட்சியின் முதற்கோலாசானாக நியமிக்கப்பட்டுள்ள பிரசன்ன ரணதுங்க இதற்கு முன்னரும் அதே பதவியில் பணியாற்றினார். தற்போதைய அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக உள்ள அவர் இதற்கு முன்னர் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். ஆனந்தா கல்லூரியின் பழையமானவரான அவர் இதற்கு முன்னர் மேல் மாகாண சபையின் முதலமைச்சராகவும் சேவையாற்றியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 75 = 76

Back to top button
error: