மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகளுக்கு பிரத்தியேக ஒழுங்கை
மட்டக்களப்பு மாவட்டத்திலும் துவிச்சக்கர வண்டி பாவனை அதிகரித்துள்ள நிலையில் துவிச்சக்கர வண்டிகளுக்கான, பிரத்தியேக ஒழுங்கை அமுலாக்கும் முன்னோடி வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.
முன்னோடி வேலைத்திட்டத்தினை மட்டக்களப்பு மாநகர சபையுடன் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
முதற்கட்டமாக மட்டக்களப்பு நகர் பகுதியிலும், நகரை அண்டிய கல்லடி பகுதியிலும் உள்ள பிரதான வீதிகளில் துவிச்சக்கர வண்டிகளுக்காக, பிரத்தியேக ஒழுங்கை ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அத்தோடு துவிச்சக்கர வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்திவைப்பதற்கான இடமும் சில பகுதிகளில ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னோடித் திட்டம் குறித்து, மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் கருத்து வெளிடுகையில்,
இந்த ஒழுங்கை முறைமை காலப்போக்கில் மட்டக்களப்பு மாநக சபைக்குட்பட்ட ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் எனவும், குறித்த ஒழுங்கை முறைமையை அனைத்து துவிச்சக்கரவண்டி பாவனையாளர்களும் கடைப்பிடிக்கும் சந்தர்ப்பத்தில் எதிர்வரும் நாட்களில் மாவட்டத்தில் விபத்துக்களை குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.