யாழில் ஈருருளி விழிப்புணர்வு பவனி ஆரம்பம்
யாழ் ஆரோக்கிய நகர திட்டத்தினூடாக ஈருருளி விழிப்புணர்வு பவனி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட முன்றலில் இருந்து இன்று (01) திங்கள் கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
ஈருருளி விழிப்புணர்வு பவனியானது கொக்குவில் சந்தியூடாக காங்கேசந்துறை வீதியினை வந்தடைந்து, கோட்டை சுற்றுவட்டத்தினூடாக யாழ் பொதுநூலக வீதியூடாக வைத்தியசாலை வீதியினை அடைந்து பலாலி வீதி ஊடாக யாழ் பல்கலைக்கழக பிரதான வாயிலை வந்தடையும்.
இந் நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட செயலர், பல்கலைக்கழக துணைவேந்தர், மருத்துவ பீட பீடாதிபதி, யாழ் மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், சமூக ஆர்வலர்களில் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளது.
யாழ் ஆரோக்கிய நகரம் செயற்றிட்டமானது உலக சுகாதார நிறுவனத்தின் முன்மொழிவாக பல்வேறு நகரங்களில் செயற்படுத்தப்பட்டு வருவதுடன், தென் ஆசியாவில் யாழ்ப்பாண நகரத்தில் முதன்முறையாக செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.
இச்செயற்திட்டமானது யாழ் மருத்துவபீடத்தின் சமுதாய மற்றும் குடும்ப மருத்துவ அலகின் நேரடி ஒருங்கிணைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தலில் உலக சுகாதார நிறுவனம், யாழ் மாநகர சபை, யுனிசெப், தொடர்புடைய அரச, அரச சார்பற்ற நிறுவங்கள், சமூக நிறுவனங்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலகம், யாழ் மற்றும் நல்லூர் பிரதேச செயலகம், சுகாதார சேவைகள் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, கல்வி அமைச்சு, மற்றும் தனிநபர்கள் என பல்வேறு தரப்பினரும் தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.
ஈருருளிப் பவனியில் ஆர்வலர்களையும், மாணவர்களையும் இணைந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.