‘வன்முறைத் தீவிரவாதத்தை தணித்தல்’ விழிப்புணர்வு
“இலங்கையில் வன்முறைத் தீவிரவாதத்தைத் தணித்தலுக்காக சமூகமட்ட அமைப்புக்களை திறன்விருத்தி செய்தல்” எனும் செயற்திட்டத்தில் வளவாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக செயற்பாட்டாளர் எப்.எச்.எம். சர்மிலா தெரிவித்தார்.
இத்தகையதொரு விழிப்புணர்வு நிகழ்வு கிழக்குப்பல்கலைக்கழக கலை கலாச்சாரப்பீடத்தின் விரிவுரையாளர்கள் மாணவர்களின் உதவியோடு தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழும் மட்டக்களப்பு காத்தான்குடியை அண்டிய ஆரையம்பதி பகுதியில் கடந்த வியாழக்கிழமை (04) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் என். சத்தியானந்தியின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றியுள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை முதுநிலை விரிவுரையாளர் சு.சந்திரகுமாரின் ஆக்கத்தில் எழுதப்பட்ட இன ஒருமைப்பாட்டுக்கான விளையாட்டுக்களுடனும் பாடல்களுடனும் தெரு நாடகங்கள் இதன்போது இடம்பெற்றுள்ளன.
வன்முறையற்ற வாழ்வை வலியுறுத்த இது நடத்தப்படுகிறது என்று தகவல் பயிற்சி நிலையத்தின் தலைமை செயற்பாட்டு அலுவலர் பி.பெனிங்னஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வுகளைப் பார்வையிட பொதுமக்களும் வருகை தந்திருந்ததுடன், தேசிய சமாதானப் பேரவை ஹெல்விற்றாஸ் சிறிலங்கா (Helvetas – Sri Lanka) ஜரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் தகவல் பயிற்சி நிலையத்தின் ஊடாக இந்நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.