ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் 2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் திருத்துவதற்கான ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு தொடர்பான ஆரம்ப உரை எதிர்வரும் 30ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருப்பதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.
அடுத்தவாரத்துக்கான பாராளுமன்ற அலுவலல்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக நேற்று (24) முற்பகல் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய ஓகஸ்ட் 30ஆம் திகதி பாராளுமன்றம் பி.ப 1.00 மணிக்குக் கூடவிருப்பதுடன், பி.ப 1.00 மணி முதல் 2.00 மணிவரை ஜனாதிபதியினால் ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு முன்வைக்கப்படும்.
அதன் பின்னர் பாராளுமன்றம் மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்ட பின்னர், ஓகஸ்ட் 31 மற்றும் செப்டெம்பர் 1 ஆகிய தினங்களில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் மதியபோசன இடைவேளை இன்றி நடத்தப்படவுள்ளது.
செப்டெம்பர் 02ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணிவரை ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடத்தப்படவிருப்பதுடன், இதன் பின்னர் குழு நிலை மற்றும் மூன்றாவது வாசிப்பு இடம்பெற்று சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளது.