கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் கடற்பகுதியில் தீச்சம்பவத்திற்குள்ளான M.V எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் கெப்டனை, 20 இலட்சம் ரூபா பெறுமதியான சொந்த பிணையில் செல்ல கொழும்பு இலக்கம் 01 மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரஷ்ய நாட்டு பிரஜையான இவர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான பயணத் தடை உத்தரவை பிறப்பிபத்து இந்த உத்தரவை மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த இன்று (14) பிறப்பித்தார்.
இவரது கடவுச்சீட்டை நீதிமன்றரில் சமர்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். இதுதொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது
கப்பல் தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் கடல்சார் சூழல் அதிகாரசபையினால் கடந்த மே 23 ஆம் திகதி கொழும்பு துறைமுக பொலிஸில் முறையிடப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைக் குழு கடந்த 31 ஆம் திகதி கப்பல் கெப்டன், பிரதம பொறியியலாளர் மற்றும் பிரதி பொறியியலாளர் ஆகியோரிடம் சுமார் 14 மணித்தியால வாக்குமூலம் பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் கப்பலின் கெப்டன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு இலக்கம் 01 மேல் நீதிமன்றில் ஆஜார்படுத்தப்பட்டார்.