கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம்
கிராமிய பொருளாதாரப் பயிர்ச்செய்கை மற்றும் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயற்திட்டம் நேற்று (09) பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களினால்
ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக குறைந்த வாழ்வாதாரத்தைக் கொண்ட மக்களின் வருமானத்தை மேம்படுத்தும் குறிக்கோளுடன் 2022ம் ஆண்டில் உளுந்து மற்றும் பயறு பயிர்ச் செய்கை திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட ஆறு பிரதேச செயலகங்களினுடாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் போசாக்கு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சிறந்த மூளைதிறன் கொண்ட விதை பொருட்கள் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
கிராமிய பொருளாதாரப் பயிர்ச் செய்கை மற்றும் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் 03 மில்லியன் பெறுமதியான விதை மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இதன் போது ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடுவதற்காக 10 கிலோ கிராம் விதைப் பொதிகள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை, விற்பனை மற்றும் உற்பத்தி சம்பந்தமான முறைப்பாடுகள் தொடர்பாக தொடர்புகொள்ள வேண்டிய நிறுவனங்களின் தொடர்பு இலக்கப்பதாதை மேலதிக அரசாங்க அதிபரினால் பட்டிப்பளை செயலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின்போது பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி.தெட்சண கௌரி தினேஷ், மாவட்ட விவசாய பணிப்பாளர் இராஜதுரை ஹரிகரன், உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், விவசாய விரிவாக்கல் மேற்ப்பார்வை அதிகாரிகள், விவசாய போதனாசிரியர்கள், பிரதேச செயலக துறைசார் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.