2022 சர்வதேச புத்தாக்க கண்டுபிடிப்பாளர் பாறூக் முஹம்மத் முனீர் பதக்கம்
புத்தாக்க கண்டு பிடிப்பாளர்களுக்கான சர்வதேச போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த பாறூக் முஹம்மத் முனீர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பங்குபற்றி சர்வதேச ரீதியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தரவு தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு அறிவியல் மற்றும் பொறியியல் போன்ற பிரிவுகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களைப் பெற்று சாதனைபடைத்துள்ளார்.
கனடாவின் டொரொண்டோவில் நடைபெற்ற (ஐ கேன்) என்னால் முடியும் என்ற இந்த சர்வதேச கண்டு பிடிப்பாளர் புத்தாக்க போட்டியில் இம்முறை 81 நாடுகளில் இருந்து 700 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
சர்வதேச ரீதியில் தகவல் தொழில்நுட்பம், தரவு தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு அறிவியல் மற்றும் பொறியியல் போன்ற பிரிவுகளில் முறையே தங்கம் மற்றும் வெள்ளி என இரட்டைப் பதக்கங்களுடன், சர்வதேச சிறப்பு விருது, கனடிய சிறப்பு விருது, முதல் 20 சிறந்த கண்டுபிடிப்பு விருது மற்றும் விசேட ஐரோப்பிய டிப்ளமோ போன்ற விருதுகளை ஒரே தடவையில் வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினால் வருடாந்தம் தேசிய ரீதியில் நடாத்தும் புத்தாக்க கண்டு பிடிப்பாளர் போட்டியில் 2020ல் போட்டியில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றி தேசியரீதியில் தங்கம் மற்றும் வெள்ளி என இரட்டைப் பதக்கங்களைப் வெற்றிபெற்றதன் பயனாக இவருக்கு சர்வதேச போட்டியில் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
காத்தான்குடி மத்திய கல்லூரி, காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயம் மற்றும் சாவியா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் மென்பொருள் திட்டமிடுதலில் கைதேர்ந்தவராகவும் நவீன இலத்திரனியல் துறையில் ஈடுபாடு கொண்டவராகவும் காணப்படுகின்றார்.
இவர் பல துறைகளுக்கு மென்பொருளினூடாக பெரும்பாலான தீர்வுகளை வழங்கிவருகின்றார். அதேநேரம் இவர் புதிய தொழில்நுட்பங்களை ஆய்வு செய்வதிலும் நவீன யுகத்துக்கு பொருத்தமாக கண்டு பிடிப்புகளை பொதுப்பயன்பாட்டுக்காக தயாரிக்கும் பணியிலும் தன்னுடைய நேரத்தை செலவிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.