இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் சட்டமூலத்திற்கு குழுவில் இணக்கம்
இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூலத்திற்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் இணக்கம்
இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு வெகுஜன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அண்மையில் (16) அனுமதி வழங்கப்பட்டது.
வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்த்தன தலைமையில் நடைபெற்ற வெஜகுஜன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.
இந்தச் சட்டமூலம்1982ஆம் ஆண்டு 06ஆம் இலக்க இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமாகும். இதற்கமைய எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டுக்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுப் பின்னர் நிறைவேற்றப்படும்.
இதற்கு மேலதிகமாக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டியதன் தேவை மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றைத் தரப்படுத்தலில் முன்னோக்கிக் கொண்டு செல்வதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், பல்வேறு ஊடகங்களினால் செய்திகள் திரிபுபடுத்தி வெளியிடப்படுகின்றமை குறித்தும், இதனைத் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
இந்தக் குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ சாந்த பண்டார, கௌரவ கனக ஹேரத், கௌரவ சிறிபால கம்லத், கௌரவ கீதா குமாரசிங்ஹ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எஸ். எம். மரிக்கார், கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ அசங்க நவரத்ன, கௌரவ மொஹமட் முஸ்ஸம்மில், கௌரவ சுமித் உடுகும்புர, கௌரவ மதுர விதானகே, கௌரவ ஜகத் குமார சுமித்ராராச்சி மற்றும் கௌரவ யாதாமினி குணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.