இளம் எழுத்தாளர்களுக்கான மேம்பாட்டுக் கூடல் நிகழ்வு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கான மேம்பாட்டுக் கூடல் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சரண்யா சுதர்சனின் மேற்பார்வையின் கீழ், அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல் தௌபீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வின் வளவாளராக எழுத்தாளரும், பேஜஸ் புத்தக இல்லத்தின் அதிபருமான சிராஜ் மஷ்ஹுர் கலந்து கொண்டதோடு, அக்கரைப்பற்று கலாசார உத்தியோகத்தர் ஏ.எம்.தௌபீக், அக்கரைப்பற்று கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நவப்பிரியா, ஆலையடிவேம்பு கலாசார உத்தியோகத்தர் ஜௌபர், முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாசார உத்தியோகத்தர் எம்.எச்.எம் முத்தார் மற்றும் இளம் எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்கள் தங்களது பேனாவை முரண்பாடு ஏற்படாமல் எவ்வாறு பயன்படுத்த வேண்டும். அதனை எப்படிப் பயன்படுத்தலாம். எழுதும் போது கையாள வேண்டிய முறைமைகள் மற்றும் நுணுக்கங்கள், எழுதுவதில் உள்ள தாற்பரியங்கள் போன்ற பலதரப்பட்ட விடயங்களையும் வளவாளராகக் கலந்து கொண்ட சிராஜ் மஷ்ஹுர் மிகத் தெளிவாக விளங்கப்படுத்தினார். அத்தோடு, செயற்பாட்டு ரீதியாகவும் இளம் எழுத்தாளர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கும் தெளிவை வழங்கினார்.