முதலாவது சூரிய மின்னுற்பத்தி நிலையம் திறந்து வைப்பு
மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நாவற்காடு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் நேற்று (11) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிராமிய வீதி மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர பிரதம அதிதியாக கலந்துகொண்டு, சூரிய சக்தி மின்நிலையத்தினை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்துள்ளார்.
சுமார் 2.5 பில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள குறித்த சூரிய சக்தி மின் நிலையத்தின் ஊடாக பிறப்பிக்கப்படும் மின்சாரமானது நேரடியாக மின்சார சபைக்கு வழங்கப்பட்டு மக்கள் பாவனைக்கான பொது மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
சூரிய சக்தி மின் நிலையத்தின் ஊடாக சுமார் 200 பேர் வரை நேரடியாக தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதுடன், 10 மெகாவாட் மின்சாரம் பிறப்பிக்கப்படுவதுடன் இதனை பிறப்பிப்பதற்காக 18676 சூரிய மின் கலங்கள், 47 மாற்றிகள், மற்றும் 04 ரான்ஸ்போமர்ஸ் என்பன இயங்கி வருகின்றது.
40 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த சூரிய சக்தி மின்நிலையத்தில், மேலதிகமாக உள்ள நிலப்பரப்பில் நாட்டின் உணவுப் பாதுகாப்பு நிலையை கருத்திற்கொண்டும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தினையும் உயர்த்தும் நோக்கில் பயிர்ச் செய்கை மேற்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் அமைச்சரின் செயலாளர்கள், மின்சார சபை உயரதிகாரிகள், இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட மேலும் பல துறைசார் அதிகாரிகள் அதிதிகளாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
இந் நிகழ்வின்போது பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் பயன்தரும் மாமரக் கன்றுகள் நடப்பட்டதுடன், அருகிலுள்ள பாடசாலைக்கு பெறுமதிவாய்ந்த Smart Board ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
WindForce PLC, Vidullanka PLC மற்றும் HiEnergy Services (Pvt) Limited ஆகிய நிறுவனங்களால் முதலீடு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள இந்த solar Universe இலங்கையின் முதலாவது விவசாய மின் உற்பத்தி நிலையமாகும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.