மக்களின் வருமானத்தில் 75 வீதம் உணவுக்கான செலவு
இலங்கையில் உரிய போசாக்குடன் கூடிய உணவு வேளையைப் பெற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை இந்நாட்டிலுள்ள சனத்தொகையில் 1/5 வீதம் மாத்திரம் என்றும், நாட்டிலுள்ள மக்களின் வருமானத்தில் 75 வீதம் உணவுக்கான செலவு என்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உபகுழுவில் தெரியவந்தது.
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உபகுழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இன்று (18) கூடியபோதே இந்த விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு, பசளைக்கான தேவை, அறுவடை வீழ்ச்சி, மந்தபோசன நிலைமை மற்றும் இதனால் ஏற்படக் கூடிய சமூக விளைவுகள் தொடர்பில் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த உபகுழு கூட்டப்பட்டிருந்தது. கடன் மறுசீரமைப்பு மற்றும் நாட்டின் மருந்துப் பொருட்களின் பாவனை தொடர்பான நிபுணர்களின் கருத்துக்கள் இதற்கு முன்னர் இந்தக் குழுவினால் பெறப்பட்டிருந்தது.
விசேடமாக பதினாறு வருடங்களுக்கு முன்னர் நாட்டில் காணப்பட்ட மந்தபோசாக்கு நிலைமை தற்பொழுது நாட்டில் நிலவும் சூழ்நிலையினால் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்ள் இருப்பதால், இதனைக் கட்டுப்படுத்த முன்னெடுக்க வேண்டிய குறுகியகால மற்றும் மத்தியகால நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
வருமானம் மற்றும் வீட்டுச் செலவீனம் தொடர்பான கணக்கெடுப்பை உடனடியாக நடத்துமாறு உபகுழுவின் தலைவர், நிதி அமைச்சுக்குப் பணிப்புரை விடுத்தார். இது தொடர்பான கணக்கெடுப்பு 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடத்தப்படவில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தக் கணக்கெடுப்பின் ஊடாக தற்போதைய பொருளாதார நெருக்கடியின் மத்தியில் சமூகப் பெறுபேறுகள் பற்றிய துல்லியமான தகவல்களைப் பெற்று எதிர்கால வேலைத்திட்டங்களைத் தயாரிக்க உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
வரி அதிகரிப்புப் போன்ற செயற்பாடுகளின் மூலம் வருமானம் அதிகரிக்கப்பட்டாலும் தொழிற்சாலைகளை நடத்திச் செல்வதில் சிரமம், வேலைகள் இழக்கப்படும் ஆபத்து மற்றும் போசனை மட்டம் வீழ்ச்சியடைதல் போன்ற சமூகப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், மனித வாழ்க்கையில் முதல் 8000 நாட்களில் உரிய போசாக்கைப் பேணவேண்டியதன் அவசியம் மற்றும் சரியான பாதுகாப்புடன் கிடைக்கும் உணவைப் பயன்படுத்துவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இலங்கை மருத்துவ சபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர.த சில்வா, போசாக்குத் தொடர்பான பேராசிரியர் ரணில் ஜயவர்தன, நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும், விவசாயம் தொடர்பான பேராசிரியருமான ரோஹன.பி மகாலியனாராச்சி, றுகுனு பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் அநுர குமார, உணவு ஆணையாளர் உபுல் சாந்த அல்விஸ், உணவுப் பாதுகாப்புத் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் பட்டகொட மற்றும் தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவா கமகே, விவசாய அமைச்சு, விவசாயத் திணைக்களம், நிதி அமைச்சு மற்றும் திறைசேரி உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் தமது கருத்துக்களை இங்கு முன்வைத்தனர்.
இதில் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் கௌரவ எம்.ராமேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.