இந்திய பல்கலைக்கழக பட்டதாரிகளையும் உள்வாங்க தீர்மானம்
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த ஆகியோருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கலந்துரையாடப்பட்ட நிலையில் குறித்த தீர்மானம் (27) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த கால யுத்த அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில், இந்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று பட்டதாரிகளானவர்கள், யுத்தம் நிறைவடைந்த பின்னர் தங்களின் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர்.
அவ்வாறானவர்கள், அண்மைய காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரச சேவைக்கான பட்டதாரிகள் ஆட்சேர்ப்புக்களின் போது, வெளிநாட்டு பட்டதாரிகள் என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பாக பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருடன் பிரஸ்தாபித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பட்டதாரிகள் நியமனத்தின் போது, வெளிநாட்டு பட்டதாரிகள் என்ற காரணத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த பட்டதாரிகளும் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுத்தியமை குறிப்பிடத்தக்கது.