22ம் திருத்த சட்டமூலம் 21ம் அரசியலமைப்பு திருத்தமாக நடைமுறைக்கு
இலங்கை பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் அண்மையில் (21) நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் 2022 ஓகஸ்ட் 10ஆம் திகதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பின்னர் இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த ஒக்டோபர் 20 மற்றும் 21ஆம் திகதி ஆகிய இரு தினங்கள் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.
இரண்டாவது மதிப்பீட்டின் இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழுநிலையில் திருத்தங்கள் உள்ளடக்கப்பட்ட பின்னர் மூன்றாவது மதிப்பீட்டுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 174 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம், இருபத்தோராவது அரசியலமைப்புத் திருத்தமாக இன்று முதல் (31) அமுலுக்கு வருகிறது.