4 உறுப்பினர்களைக் கொண்ட குழு நியமிக்க தீர்மானம்
பாராளுமன்றத்தில் புதிதாக அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மூன்று நிலையியற் குழுக்கள் குறித்து மேலும் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்க நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க நேற்று (08) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.
வங்கித் தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு, வழிவகைகள் பற்றிய குழு, பொருளாதார உறுதிப்படுத்தல் குழு ஆகிய மூன்று குழுக்களுமே இவ்வாறு அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய வெளிநாட்டு அமைச்சர் கௌரவ அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா, கௌரவ எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கௌரவ சாகர காரியவசம் ஆகியோரே இந்த விசேட குழுவில் நியமிக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
தற்பொழுது நடைமுறையில் உள்ள நிலையியற் குழுக்களான அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு), அரசாங்க நிதி பற்றிய குழு ஆகிய குழுக்களின் செயற்பாடுகள் இந்தப் புதிய நிலையியற் குழுக்களின் விடயதானங்களுடன் மேற்படுகை செய்கின்றனவா என்பது குறித்து ஆராய்ந்து திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அது பற்றிய பரிந்துரைகளை இந்தக் குழு முன்வைக்கும்.
இதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடி இந்தக் குழுவின் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.