அக்குறணை பிரதேச சபையின் 2023 பட்ஜட் ஏகமனதாக நிறைவேற்றம்
பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் நன்றி தெரிவிப்பு
அக்குறணை பிரதேச சபையின் எதிர்வரும் 2023ம் வருடத்திற்கான வரவு செலவு திட்டம் (பட்ஜட்) அக்குறணை பிரதேச சபையின் விசேட பொதுக்கூட்டத்தில் (08) முன்வைக்கப்பட்டு, சபையின் அனைத்து கௌரவ உறுப்பினர்களாலும் ஏகோபித்ததாக அங்கீகரிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் (09) தெரிவித்தார்
அபிவிருத்திகள் மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திகள், கல்வி மற்றும் தொழிற்கல்விசார் செயற் திட்டங்கள், சுகாதார மேம்பாடுகள் உட்பட சகல துறைகளிலும் இன்னும் அதிகமான முயற்சிகளை மேற்கொண்டு இலங்கையின் முதல் தர உள்ளூராட்சி மன்றமாக அக்குறணை பிரதேச சபையை மாற்றுவதற்கு முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்
சிறந்த முறையில் மக்களுக்கு சேவை நல்கும் மக்கள் மயமான பிரதேச சபையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அக்குறணை பிரதேச சபை எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும் அக்குறணை பிரதேச சபையின் தலைவர் என்ற வகையில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு அளித்து நிறைவேற்றுவதற்கு ஒத்துழைத்த பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அத்துடன் பிரதேச சபை அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் எனவும் அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் சுட்டிக்காட்டினார்.