வசதியான சீருடை குறித்த சுற்றறிக்கையில் திருத்தம் – அமைச்சர்
வசதியான சீருடை குறித்த சுற்றறிக்கையை உரிய முறையில் தயாரித்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர நேற்று (22)பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
ஆசிரியர்கள் சாரிக்கு பதிலாக பல்வேறு சீருடைகளில் பாடசாலைக்கு வருகை தருவதை தாம் கண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார். இவர்கள் தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
கொரோனா தொற்று காலப்பகுதியில் அரச ஊழியர்களுக்கு வசதியான சீருடையை அணிந்து கொள்ள முடியும் என அரச நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது என்று தெரிவித்த கல்வி அமைச்சர் அரச ஊழியர்கள் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் ஆசிரியர்கள் இதற்கு உட்படவில்லை என்றும் தெரிவித்தார்.
அரச நிர்வாக அமைச்சு புதிய சுற்றறிக்கையை சமர்ப்பித்த பின்னர் ஏற்படும் நிலையை அவதானிப்போம் என்று தெரிவித்த அமைச்சர், வசதியான சீருடை அணிந்து வந்தவர்கள் என கூறப்படும் ஆசிரியர்களின் காட்சிகளை கண்ட போது அவை பாடசாலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்றும் அமைச்சர், தெரிவித்தார்.