61 வது இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய
ஸ்ரீ ஜயவர்தனபுரயில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் நேற்று முன்தினம் (01) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் 61 வது இராணுவ பதவி நிலைப் பிரதானியாக பதவியேற்றார்.
மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத்தளபதியாக பதவி வகிக்கின்றார். இராணுவத் தளபதியின் பரிந்துரையின் பேரில் இந்த நியமனத்தை பொறுப்பேற்பதற்கு முன்னர் அவர் இராணுவத்தின் பிரதிப் பதவி நிலை பிரதானியாக பணியாற்றினார்.
இந் நிகழ்வில் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி, பிரதம பதவி நிலை அதிகாரிகள், பணிப்பாளர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இணைந்திருந்தனர்.
மேஜர் ஜெனரல் சீடி வீரசூரிய ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களின் சுருக்கமான விவரம் இங்கே;
மேஜர் ஜெனரல் சி.டி வீரசூரிய ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் 15 ஜூலை 1968 இல் கொழும்பில் பிறந்தார். அவர் கொள்ளுப்பிட்டி மகாநாம கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்தார். அங்கு அவர் விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்தவராக விளங்கினார்.
அவர் 1986 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி இராணுவத்தின் 26 வது பாடநெறியின் பயிலிளவல் அதிகாரியாக இணைக்கப்பட்டு, 1987 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி இலங்கை காலாட் படையணி தலைமையகத்திற்கு உள்வாங்கப்பட்டதுடன், அவர் முதலாவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் இரண்டாவது லெப்டினனாக நியமிக்கப்பட்டார். இராணுவ வாழ்க்கையில் 36 ஆண்டுகளுக்கும் மேலான கணக்கிடத்தக்க சேவையை ஆற்றியுள்ளார்.
மேஜர் ஜெனரல் சீடி வீரசூரிய ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு கட்டளை திறன்களில் பல முக்கியமான நியமனங்களை வகித்துள்ளார். அவர் மிகவும் தீவிரமான யுத்த நடவடிக்கைகளின் சகாப்தத்தில், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின், 4 வது காலாட் படையணியில் கட்டளை அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.படையலகு தளபதியாக பதவிக்காலத்தை நிறைவு செய்த அவர், 23 வது படைப்பிரிவில் பொது பணி நிலை அதிகாரி 1 (ஒருங்கிணைத்தல்), 58 வது படைப்பிரிவு பதவி நிலை பிரதானி, இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக நிலைய தளபதி, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி, இராணுவ தலைமையகத்தின் ஆட்சேர்ப்பு பணிப்பகத்தின் பணிப்பாளர் என பல்வேறு நியமனங்களை வகித்துள்ளார் என்பது அறியத்தக்க விடயமாகும்.
மேஜர் ஜெனரல் சீடி வீரசூரிய ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு 512, 523 மற்றும் 663 வது காலாட் பிரிகேட்களின் தளபதி , வான்வழி பிரிகேட் தளபதி , திருகோணமலை 22 வது படைப்பிரிவு தளபதி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி உட்பட பல நியமனங்களில் பணியாற்றியுள்ளார். இலங்கை இராணுவத்தின் பதவி நிலைப் பிரதானியாக கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர், அவர் இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலைப் பிரதானியாக கடமையாற்றினார்.
போர்க்களத்தில் எதிரிகளை எதிர்கொள்வதில் சிறந்து விளங்கிய விலைமதிப்பற்ற தன்னலமற்ற அர்ப்பணிப்பைப் பாராட்டி சிரேஷ்ட அதிகாரிக்கு ‘ரண விக்கிரம பதக்கம்’ மற்றும் ‘ரண சூரப் பதக்கம்’ ஆகிய பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேஜர் ஜெனரல் சீடி வீரசூரிய ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர் பின்பற்றிய உள்ளூர் பாடநெறிகளுக்கு மேலதிகமாக, பாகிஸ்தானில் இளம் அதிகாரிகள் பாடநெறி, இந்தியாவில் மோட்டார் பயிற்சி, பங்களாதேஷில் சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி, பங்களாதேஷில் ஐக்கிய நாடுகள் சபையின் பணிநிலை அதிகாரிகளின் பாடநெறி மற்றும் இந்தியாவில் சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி ஆகியவற்றில் கலந்துகொண்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், அமெரிக்கா கலிபோர்னியாவில் நடைபெற்ற ‘இராணுவ வழிமுறைகளால் மோதல் தீர்வு’ மற்றும் மங்கோலியாவில் நடைபெற்ற ‘தெற்காசியா மற்றும் வடகிழக்கு ஆசிய நாடுகளின் பாதுகாப்பு’ ஆகிய கருத்தரங்குகளில் கலந்துகொண்டுள்ளார். மேஜர் ஜெனரல் சன்னவீரசூரிய பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் போர் பாடநெறியில் பட்டம் பெற்றுள்ளார்.