கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது – விஞ்ஞானி
சீன வூஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் வெளியேறியது
கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என சீனாவில் உள்ள வூஹான் ஆய்வக விஞ்ஞானி தனது புதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப். இவர் வூஹான் வைராலஜி ஆய்வு மையத்தில் பணியாற்றி வந்தார். இவர் தற்போது ‘‘வூஹானைப் பற்றிய உண்மைகள் (தி ட்ரூத் அபவுட் வூஹான்)’’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். அதில், கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்திலிருந்து வெளியேறியதுதான். அது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹப் கூறியதாவது: வெளிநாட்டு ஆய்வகங்களில் சரியான உயிரியல் பாதுகாப்பு, இடர் மேலாண்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்கான போதுமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லை. அதன் விளைவாகத்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிவு ஏற்பட்டது.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, இந்த வூஹான் அமைப்பு, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் (என்ஐஎச்) நிதியுதவியுடன் வவ்வால்களில் பல வகையான கரோனா வைரஸ்களை ஆய்வு செய்து வருகிறது. என்ஐஎச் என்பது உயிர் மருத்துவம் மற்றும் சுகாதார ஆராய்ச்சிக்கு பொறுப்பாக செயல்படும் அமெரிக்க அரசின் முதன்மையான நிறுவனம். எனவே, ஆபத்தான இதுபோன்ற உயிரி தொழில்நுட்பத்தை சீனர்களுக்கு மாற்றியதற்கு அமெரிக்க அரசாங்கமே துணை போய்விட்டது. உயிரி ஆயுத தொழில்நுட்பத்தை அவர்களின் கைகளில் நாமே ஒப்படைத்துவிட்டோம். இவ்வாறு அவர் அந்தப் புத்தகத்தில் கூறியுள்ளார்.
வூஹான் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு உரிய வளங்கள் இல்லாத போதும், அதன் உலகளாவிய நிலையை உயர்த்துவதற்கு அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தத்தை கொடுப் பதாக நியூயார்க் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.(இந்து)