சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் துறையினர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் சிறந்து விளங்கக்கூடிய சூழலை உருவாக்குவேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதில் பிரதான பங்குதாரர்களான தொழில்துறையினரை வலுவூட்டுவதற்கு அரசாங்கம் தயார் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று (20) நடைபெற்ற ‘சாதனையாளர் விருது – 2022’ இல் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை தேசிய கைத்தொழில் சம்மேளனம் கைத்தொழில் அமைச்சுடன் இணைந்து 21 ஆவது தடவையாக இவ்விருது வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைப் பார்த்து வருந்துவதை விடுத்து, சுபீட்சமான எதிர்காலத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இரண்டாம் உலகப் போரினால் அழிந்த ஜப்பானும் ஜெர்மனியும் கட்டியெழுப்பப்பட்ட விதத்தை நாம் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.