சந்தையில் தற்போது நிழவுகின்ற முட்டை தட்டுப்பாட்டிற்கு தீர்வாக, தேவை ஏற்படின் தற்காலிகமாக வெளிநாட்டிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
சந்தையில் முட்டை ஒன்றை கொள்வனவு செய்வதற்கு 50 ரூபாவிற்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், விசேடமாக பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு முட்டையை வழங்குவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்று சுட்டிக் காட்டினார்.
அதன்படி, முட்டை பண்ணையாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், நுகர்வோருக்கு பொருத்தமான விலையில் முட்டையை வழங்குவதற்காக வேண்டி, தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இது தொடர்பான யோசனையை முன்வைத்தார்.
முட்டை தட்டுப்பாடு மற்றும் முட்டை விலை குறித்து அமைச்சரவையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. அதன் பிரகாரம் தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்